செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் புராதன வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சைவ சமய நால்வரால் பாடல் பெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, கடந்த 2009-ம் ஆண்டு தேர் செய்யப்பட்டது. இத்தேர் சுவாமி – அம்பாளுக்கான தேராக இருந்து வந்தது.
எனினும் ஸ்ரீ இளங்கிளி அம்மனுக்கு என்று தனியாக இங்கு தேர் இல்லாமல் இருந்தது. அதனால், அறநிலையத் துறை அனுமதியுடன் பொதுமக்கள் பங்களிப்புடன் 2014-ம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பிலான 36 அடி உயரம் கொண்ட தேர் செய்யப்பட்டது. இதையடுத்து, 2009-ல் செய்யப்பட்ட தேர் இளங்கிளி அம்மன் தேராகவும், 2014-ல் செய்யப்பட்ட தேர் ஆட்சீஸ்வரர் – அம்பாள் வளம் வரும் பெரிய தேராகவும் இருந்து வந்தது. தற்போது இளங்கிளி அம்மன் தேர் பழுது அடைந்துள்ளது. இதை கோயில் நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.தேவராஜன் என்பவர் இளங்கிளி அம்மனுக்கு ரூ.60 லட்சத்தில் புதிதாக தேர் ஒன்றை செய்ய உள்ளதாகவும், அதற்காக, திருத்தேர் திருப்பணி குழு தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, தேரின் மாதிரி படத்தையும் பதிவிட்டு, தேருக்கு நன்கொடை கோரும் அறிவிப்பு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை நம்பி சில பக்தர்கள் நன்கொடை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தேர் செய்வதற்கு அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் எப்படி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடலாம் என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் வசூல் நடத்தும் நபர் மீது இந்து அறநிலையத் துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்து முன்னணி அமைப்பின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளரான ரா.ராஜா ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் பெயரில் தேர் செய்வதற்கு சமூக வலைதளங்கள் மூலம் வசூல் செய்யும் எஸ்.தேவராஜன் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடமும் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
கோயில் நிர்வாகத்திடம் அளித்துள்ள புகாரில், “தேர் செய்வதற்கு யாரையும் திருப்பணிக் குழு தலைவராக நியமிக்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் செய்தியை நம்ப வேண்டாம் என கோயில் வளாகத்தில் அறிவிப்பு வைக்க வேண்டும். ஏற்கெனவே தேவராஜ் ஆட்சிஸ்வரர் கோயில் சொத்தை அபகரித்தது வைத்திருந்தார்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மதுராந்தகம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த இடத்தை மீட்டெடுத்தனர். தேர் செய்வதற்காக திருப்பணி குழு தலைவராக யாரையும் நியமிக்கவில்லை என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தேவராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரி இருக்கிறார் ராஜா.