ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றில் குளித்த சென்னை தீயணைப்புத் துறை ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை மீட்க முடியாததால் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு 2-வது நாளான நேற்று காலை உடல் மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). சென்னை தாம்பரம் தீயணைப்புத் துறையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன் வைகை அணை அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றார். தற்போது சிவகங்கை மாவட்டத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடுப்பணையில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
மீட்புப் பணி: இது குறித்து அவரது நண்பர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு தேடும் பணி நடந்தது.
ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, பெரியகுளத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை வரை கண்டறிய முடியவில்லை.
2-வது நாளாக நேற்று காலை தேடும் பணி தொடர்ந்தது. அப்போது ஒரு கிமீ. தூரத்தில் கருங்கற்களுக்கு இடையில் சதீஷ்குமார்உடல் சிக்கி இருப்பது தெரிய வந்தது. உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைகை அணை போலீஸார் விசாரிக்கின்றனர்.
எச்சரிக்கை அறிவிப்பு: இறந்த சதீஷ்குமாருக்கு மனைவி ராஜேஸ்வரி (33), மகன்கள் ராஜமித்திரன் (6), கவீந்திரன் (3) ஆகியோர் உள்ளனர். நீர்வளத் துறையினர் கூறுகையில், வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறோம். நீரோட்ட காலங்களில் ஆற்றில் இறங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றனர்.