ஆசிட் தாக்குதலில் இருந்து பெண்கள் மீண்டாலும், அதன் விளைவுகளால் வாழ்க்கை முழுவதும் அவதியுறும் நிலை இருக்கிறது. 2006-ல் ஆசிட் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர் பிரக்யா பிரசூன். இவர் கடந்த ஆண்டு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், `கண்களை சிமிட்ட முடியாததால் கேஒய்சி (KYC) செயல்முறையை நிறைவு செய்யமுடியவில்லை. இதனால் எனக்கென பேங்க் அக்கவுன்ட் உருவாக்க முடியவில்லை’ என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
பொதுவாகவே பேங்க் அக்கவுன்ட் உருவாக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேஒய்சி செயல்முறை கட்டாயம். ஆனால், பிரக்யாவின் விஷயத்தில் அவரால் கண் சிமிட்ட இயலாததால் பயோமெட்ரிக் ஸ்கேன் செய்ய இயலாமல் போனது. இதனால் அடிப்படையான வங்கி சேவை கூட அவருக்கு மறுக்கப்பட்டது.
இது ஒரு முக்கியமான விஷயம். ஆசிட் தாக்குதலில் அவர்களின் முகம் மற்றும் கண்கள் சிதைந்து விடும். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு கேஒய்சி செயல்முறையை அவர்களுக்கேற்றாற்போல மாற்றுவது அரசின் கடமை.
இந்தப் பிரச்னையை தான் பிரக்யா பிரசூன் உட்பட ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த 9 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பி நிரந்தர கண் சிதைவு அல்லது கண் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளி ஆனவர்களுக்கும் டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை நடத்த, மாற்று முறைகளை வழங்கத் தகுந்த வழிகாட்டுதல்களை உருவாக்க அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
கேஒய்சி செயல்முறையைச் செய்ய முடியாமல் அடிப்படை நிதி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அணுகக்கூட பல தடைகளை எதிர்கொண்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை நடத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மாற்று முறைகள் அல்லது வழிமுறைகளை வழங்க பொருத்தமான நிறுவன கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் மனு கோரியது.
அதோடு ஆர்பிஐ – கேஒய்சி மாஸ்டர் டைரக்ஷன்ஸ், 2016-ன் கீழ் டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையில் `நேரடி புகைப்படம்’ என்ற தேவையைப் பூர்த்தி செய்ய, ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களை ஈடுபடுத்த பொருத்தமான மாற்று முறைகளை உருவாக்க ஆர்பிஐக்கு உத்தரவிடவும் மனு கோரியது.
இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், `ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பி நிரந்தர கண் சிதைவு அல்லது கண் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை நடத்த மாற்று முறைகளை வழங்கும் தகுந்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.