திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே எஸ்.வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் – வேளால் தம்பதி. இவர்களின் மகன் வடிவேல் (30). இவர் கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, கோவில்பாளையத்தைச் சேர்ந்த தேவராஜ், மரியாள் தம்பதியின் மகள் திவ்யாவை வடிவேல் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
மது பழக்கம் இருக்கும் வடிவேல், திவ்யாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணவர் வடிவேல் காணாமல் போனதாக அவரின் மனைவி திவ்யா அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் வடிவேலை தேடி வந்துள்ளனர்.
ஆனால், வடிவேல் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வடிவேலின் பெற்றோர் அவரைக் கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். மேலும் வழக்கை விரைவாக விசாரணை மேற்கொள்ளுமாறும் வழக்கு தொடுத்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.
இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் சேது மாதவன், பாலமுருகன், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் வடிவேலை தீவிரமாக தேடத் தொடங்கினர். வடிவேலின் மனைவி திவ்யாவின் நடவடிக்கை தொடர்பாக அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், திவ்யாவின் தாய் மரியாளின் ஆண் நண்பரான மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருடன் திவ்யா அதிக முறை பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பாலாஜியை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், வடிவேலுக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ. 7 லட்சம் பணம் வந்ததும், அதை திவ்யாவின் குடும்பத்தினர் எடுத்து செலவு செய்தும் உள்ளனர். அதுகுறித்து மது போதையில் வடிவேல் பணத்தை திருப்பி தருமாறு தொடர்ச்சியாக திவ்யாவை அடித்ததாக கூறப்படுகிறது.
மருமகன் வடிவேல் தனது மகளை அடித்து துன்புறுத்துவதாக திவ்யாவின் தாய் மரியாள் பாலாஜியிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, வடிவேலுவை கொலை செய்யத் திட்டமிட்ட திவ்யா, அவரின் தாய் மரியாள், தந்தை தேவராஜ், பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் உள்பட ஏழு பேர் சேர்ந்து, வடிவேலுக்கு தென்னை மர வண்டுக்கான மாத்திரையை கொடுத்துள்ளனர். இதில் அவர் மயங்கவே, கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், அவரது உடலை தார்ப்பாய் மூலம் கட்டி கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள சதீஷ் என்பவரது தோட்டத்து கிணற்றில் வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வடிவேலுவின் உடல் வீசப்பட்ட கிணற்றில் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் தேடியதில், தார்ப்பாயில் கட்டப்பட்டு எலும்புக்கூடாக வடிவேலுவின் சடலம் மீட்கப்பட்டது.
வடிவேலுவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக வடிவேலுவின் மனைவி திவ்யா, தாய் மரியா, தந்தை தேவராஜ், பாலாஜி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து, உசிலம்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ், காட்டூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88