கோவை: கோவையில் சனிக்கிழமை மதியம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் உற்சாகமடைந்தனர்.
கோவையில் ஏப்ரல் மற்றும் மே தொடக்கத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சுட்டெரித்த வெப்பத்தை குறைக்கும் வகையில், கடந்த சில நாட்களாக கோவையில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோவையின் சில பகுதிகளில் சில மணி நேரம் மழை பெய்தது. அதேசமயம், இரவு மழை பெய்த சூழலுக்கு எதிர்மாறாக இன்று காலை முதலே வெயில் கொளுத்தியது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்கும் விதமாக இன்று மதியம் வானிலை மாறியது. வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை கொட்டத் தொடங்கியது.
தொடக்கத்தில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் ஆக, ஆக, வெளுத்து வாங்கத் தொடங்கியது. மதியம் 3 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரம் கனமழையாக கொட்டித் தீர்த்தது. மாலை 5.15 மணியளவில் தான் மழை குறைந்தது. பீளமேடு, ஆவாம்பாளையம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், காந்திபுரம், சாயிபாபாகாலனி, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், கிணத்துக்கடவு, சூலூர் என மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.
கோடை வெப்பத்தை தணிக்க பெய்த இந்த கோடை மழையால், கோவை சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரத்தின் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதனால், ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் அதிகம் நனையாமல் இருக்க ரெயின் கோட் அணிந்து வாகனங்களில் சென்றனர். பாதசாரிகள் குடை பிடித்தபடி நடந்து சென்றனர்.
கனமழையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, வாகனம் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஷெட் சரிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்தது. ஆர்.எஸ்.புரத்தில் மரம் முறிந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலைய வளாகங்களில் மழை நீர் தேங்கியது.