தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. கலைஞர் நூற்றாண்டு நூலகம், பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு அரங்கம் என எங்கு திரும்பினாலும் கலைஞரின் பெயர்தான் என விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். உட்பட்சமாக, பாடத்திட்டதிலும் கலைஞரின் பெயர்தான் இடமிருக்கிறது என தமிழிசை விமர்சித்துள்ளார். அதாவது, “2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பிறகு நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பள்ளிக்கல்வி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும்” எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
அதையடுத்து, 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில், `தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள்’ குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 10 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடை பகுதியில், ’பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மொத்தம் ஐந்து பக்கங்கள் நிறைந்த இந்த பாடத்தில், கருணாநிதியின் பெற்றோர் பெயர், அவரது பிறந்த நாள், பள்ளிப் படிப்பு, இலக்கியப் பணி, அரசியல் நிகழ்வுகளோடு “போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக் கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ்க் கலைஞர், கவிதைக் கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர்” உள்ளிட்ட 11 பிரிவுகளில், அவரது செயல்பாடுகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, அவர் மறைந்த நாள் குறிப்பிடப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என எழுதி ‘மு.க.’ என அவரது கையெழுத்தும், கருணாநிதியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதேபோல், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் குடிமையியல் பிரிவில், ‘பெண் உரிமை சார்ந்த சட்டங்கள்’ என்ற தலைப்பின்கீழ் கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், “கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதற்காக 1956 இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தமிழகத்தில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சமஉரிமை கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 9ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், கருணாநிதி குறித்த சிறிய பகுதி இடம்பெற்றுள்ளது.
கடந்த, 2011ல் அறிமுகமான, சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில், கருணாநிதி குறித்தும், தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்தும் பாடங்கள் இடம் பெற்றிருந்ததை, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அப்பகுதிகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டு நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராசன், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளன. எனவே, அதில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முன்னாள் முதல்வர் கலைஞரைப் பற்றி 9, 10-ம் வகுப்புப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது. தற்போது, எட்டாம் வகுப்புப் பாடத்திலும் கலைஞரைப் பற்றி பாடப் பகுதிகள் இடம்பெற்றுள்ளது. மத்திய பாஜக அரசு கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி `காவி’மயமாக்கப்படுகிறது என்று இங்கிருப்பவர்கள் குதித்தார்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டில் கல்வி `கலைஞர்’ மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். இதற்கு ஒரு வழிகாட்டு முறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்.
ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி’ என்று சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியைக் காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லிவிட்டார்” எனத் தமிழ்நாடு பாடநூலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து மிகையாக இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் செய்திருந்தார்.
தமிழிசையின் விமர்சனம் குறித்து, தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “ஏன் கலைஞரின் பெயரை வைக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை முதல்வராக இருந்தவர், ஏழு பிரதமர்களை, ஐந்து ஜனாதிபதிகளைத் தீர்மானித்தவர், இந்திய துணைக் கண்டத்துக்கு முன்னொடியாகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். இன்றைக்கு இருக்கும் முதல்வர்கள் கொடியேற்றக் காரணம் தலைவர், பெண்களுக்குச் சொத்துரிமை இருக்குன்னா அதுக்குக் காரணம் தலைவர், இந்திய விவசாயிகளின் கடனை ரத்து செய்யக் காரணமாக இருந்தவர் கலைஞர், பெண்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றக்கூடிய பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தவர் கலைஞர். இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே முக்கியமான தலைவராக இருந்தவர் கலைஞர்.
இந்த நாட்டிற்கு எந்த வகையில் தொடர்பில்லாத, சுதந்திரமே வேண்டாம் எனச் சொன்ன சாவர்க்கரின் கதையைப் பாடமாக வைத்தால் எந்தச் சிக்கலும் இல்லை என நினைக்கும் தமிழிசைக்கு கலைஞர் பற்றிப் பேசக்கூடத் தகுதியில்லை.” என பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88