முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலம் திருச்செந்தூர்தான். பக்தர்கள், இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு பின்னர் நாழிக்கிணற்றிலும் நீராடிவிட்டு முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். இரவு நேரங்களில் சிலுசிலுவென வீசும் இதமான கடல் காற்றில் கடற்கரையிலேயே பக்தர்கள் உறங்குவார்கள்.
இதனால், காலை முதல் இரவு வரை கடற்கரையோரம் எப்போதுமே பெருங்கூட்டத்தைப் பார்க்க முடியும். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாளுக்கு நாள் திருச்செந்தூரில் வெளியூர், வெளி மாநில பக்தர்களின் வருகை அதிரிகரித்து வருகிறது. பொதுவாக கடல் கரையில் இருந்து சில மைல் தூரத்தைக் கடந்துதான் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழும். எப்போவாவதுதான் அலை அதிகம் அடித்தோ, திசைமாறியோ வரும்.
அவை உயிரோடு இருந்தால் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். சுறா போன்ற பெரிய மீன்கள் படகுகளில் மோதி இறந்தால் கரை ஒதுங்கும். இந்த நிலையில், காலநிலை மாற்றத்தினால் தற்போது தமிழ் மாதங்களில் பெளர்ணமி, அமாவாசை, சஷ்டி திதி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டத்தில் மாறுபாடு ஏற்படுகிறது என்கிறார்கள் கடலோரத்தில் வசிக்கும் மக்கள். அந்நாட்களிலோ அல்லது அதன் பின்வரும் நாட்களிலோ, கடல் நீர் மட்டம் குறைந்து சில மீட்டர் தூரம் உள் வாங்கி காணப்படுவதும் தொடர்கதைடாகி வருகிறது.. அப்போது பாறைகள் வெளியே தென்படும்.
அடுத்த சில நாட்களில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இதே காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது கோயில் கடலில் நீராடும் கரையோரம் வரை வருகிறது. பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ இருப்பதால் பக்தர்கள் அதானை பஞ்சு எனவும், ஒருவகைப் பாசி எனவும் நினைத்தும் அதனை தொட்டு விடுகின்றனர். விவரமறியா குழந்தைகள் அதனை கையில் எடுத்தும் விளையாடுகின்றனர்.
அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் மக்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. அந்த மீன்கள் கடித்த உடன் கை, கால்களில் தடுப்பு மற்றும் ஊறல் ஏற்பட்டு சிவப்பு நிறமாகி விடுகிறது. தீப்பட்டது போல எரிச்சலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனால் பக்தர்கள் கடலில் குளிக்கும் போதும், கால் நனைக்கும் போதும் ஜெல்லி வகை மீன்களைக் கண்டால் அவற்றை கையால் தொட வேண்டாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் பேசினோம், “கோடை காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஜெல்லி வகை மீன்கள் ஆழ்கடலில் இருந்து கரைக்கு ஒதுங்கும். தற்போது காலநிலை மாற்றத்தினால், அவ்வப்போது கடல் நீர் மட்டத்திலும் மாற்றம் ஏற்படுவதால் ஜெல்லி மீன்கள் அடிக்கடி கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. கடலில் நீராடும் பக்தர்கள் ஜெல்லி மீன் பட்டு உடலில் எரிச்சலோ தடுப்போ ஏற்பட்டால் உடனடியாக உமிழ்நீரை ஜெல்லி மீன் கடித்த இடத்தில் தடவினாலோ அல்லது தேங்காய் எண்ணெய் தடவினாலோ சீராகி விடும்.
ஆனால், சில விஷ ஜெல்லி மீன்கள் கடிப்பதால் கட்டாயம் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும்” என்றனர்.
திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் பேசினோம், “ஜெல்லி மீன்கள் தாக்கம் மற்றும் தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மீன் வளத்துறைக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரை மற்றும் வழிகாட்டுதலின் படி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி குகை அருகில் மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் அச்சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது” என்றார். ஜெல்லி மீன்கள் குறித்து கடற்கரையில் ஆங்காங்கே விழிப்புணர்வு தகவல் பலகைகள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88