• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும்.
• நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது – AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை இல்லத்தைப் பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு.
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்திற்காக இவ்வருடம் 100 பிரதேச செயலகப் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக 25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரண்டாம் கட்டமாக 75 பிரதேச செயலகப் பிரிவுகளும் விவசாயத்தை நவீனமயப்படுத்தத் தேவையான வசதிகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கேகாலை நெலுந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேகா காரை உருவாக்கிய கலாநிதி ஹர்ஷ சுபசிங்கவின் பசுமை இல்லத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று (17) சென்றபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் விவசாய துறையில் 07 வருட அனுபவத்தை கொண்ட AI Grow நிறுவனத்தினால் (AI) பசுமை இல்லம் மற்றும் திறந்த பயிர்ச்செய்கை உள்ளிட்ட இரு பிரிவுகளும் தானியக்க முறைமையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில், பசுமை இல்லத் திட்டங்கள் இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பசுமை இல்லங்களுக்கான சேவை மற்றும் பராமரிப்புச் சேவைகளும் வழங்கப்படுகின்றன. குறித்த நிறுவனத்தினால் கேகாலை நெலுந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது பசுமை இல்லம் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தக்காளி, மிளகு, சலாது உள்ளிட்ட விளைச்சல்கள் இந்த இல்லத்தில் பயிரிடப்பட்டுள்ளது. காளான் உற்பத்திக்கு தனியாதொரு பிரிவும் நிறுவப்பட்டுள்ளது.
தற்போது AI Grow நிறுவனத்தின் பெருமளவான உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு வர்த்தக நிலையங்களிலும் இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் விநியோகிக்கப்படுகின்றன.
அதேபோல் இந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் பசுமை விவசாயத்துக்கான தானியக்க இயந்திரங்கள் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைக்கும் விநியோகிக்கப்படுகிறது. AI Grow தேசிய பல்கலைக்கழங்களுடன் ஒத்துழைத்துச் செயற்படும் வகையில் AI தொடர்பான உயர் கல்வி வாய்ப்புக்களுக்கான வசதிகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
AI Grow நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கலாநிதி ஹர்ஷ சுபசிங்கவினால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கர வண்டிகளையும் மோட்டார் சைக்கிள்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பார்வையிட்டார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது எதிர்கால பசுமைப் பொருளாதாரத்தின் அடையாளமாகும். இத்தகைய தனியார் தொழில்முனைவோரின் வழிகாட்டுதலின் கீழ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரிவான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நாட்டில் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளை நவீன விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ் 25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 75 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் தேவையான வசதிகள் வழங்கப்படும்.
தனியார் தொழில்முனைவோருக்கும் இந்த திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் நிதி வசதிகளை அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் சனத்தொகைக்கு இணையாக உணவு உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த அளவு நிலத்தில் அதிக அறுவடையைப் பெற வேண்டும். அதற்கு நவீன விவசாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நாட்டில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நான் நம்புகிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க, கேகாலை மாவட்டச் செயலாளர் ரஞ்சன் ஜயசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.