பிளே ஆப் சென்றது ஆர்சிபி… தோல்வியுடன் விடைபெறுகிறாரா தோனி – வெளியேறிய சிஎஸ்கே!

RCB vs CSK Match Highlights: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான பரபரப்பான லீக் போட்டியில் வெற்றி பெற்று நான்காவது அணியாக ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் சிஎஸ்கே அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடலாம் என்ற நிலையில், வெறும் 191 ரன்களை மட்டும் எடுத்து சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. 

டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 219 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் 0, மிட்செல் 4 என பவர்பிளேவில் ஆட்டமிழந்தனர். ரஹானே – ரச்சின் ஆகியோர் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரஹானே 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ரச்சின் ரவீந்திரா அதிர்ச்சியளிக்கும் வகையில் ரன்அவுட்டானார். இதன்மூலம், 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து ரச்சின் வெளியேறினார். 

அடுத்து துபே 7, சான்ட்னர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழக்க கடைசி 5 ஓவர்களில் ஜடேஜா – தோனி சிறப்பாக விளையாடி 201 ரன்களை நெருங்கினர். இதன்மூலம் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட தோனி முதல் பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டினார். இருப்பினும் இரண்டாவது பந்தில் கேட்ச் கொடுத்து தோனி வெளியேற ஆட்டம் தலைகீழாக மாறியது. அடுத்த நான்கு பந்துகளிலும் 1 ரன்னே எடுக்கப்பட சிஎஸ்கே தோல்வியடைந்து, நெட் ரன்ரேட் குறைந்து பிளே ஆப் செல்லாமல் வெளியேறியது. ஆட்டநாயகன் விருதை பாப் டூ பிளெசிஸ் வென்றது.

 seal the final spot for #TATAIPL 2024 Playoffs

What a turnaround

Scorecardhttps://t.co/7RQR7B2jpC#RCBvCSK | @RCBTweets pic.twitter.com/yHS7xnEn8x

— IndianPremierLeague (@IPL) May 18, 2024

இரு அணிகளும் 14 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ஆர்சிபி அணி அதிக நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த போட்டியை மொத்தம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றது. இதன்மூலம், மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி விளையாடும். 

லீக் சுற்றின் கடைசி நாளான நாளை இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மாலை ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில் இரவில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஒருவேளை நாளைய போட்டிகளில் பஞ்சாபை ஹைதராபாத் வீழ்த்தி, ராஜஸ்தானை கொல்கத்தா வீழ்த்தும்பட்சத்தில் ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டிக்கும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் போட்டிக்கும் தகுதி பெறும் எனலாம். இருப்பினும் நாளைய போட்டிகளின் வெற்றி தோல்வியே புள்ளிப்பட்டியலின் இரண்டாவது, மூன்றாவது இடத்தை முடிவு செய்யும் எனலாம். 

தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் போட்டியாக கூட அமையலாம். அடுத்தாண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வியுள்ளது. அந்த வகையில், தோனி தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் நிறைவு பெற்றுள்ளார் என்றும் கூறலாம். இருப்பினும், அதிகாரப்பூர்வமாக தோனி அறிவிக்கும் வரை அது உறுதியாகாது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.