மேற்குவங்கத்தில் வரும் 25-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் அபிஜித் கங்கோபத்யாய் போட்டியிடுகிறார். இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. சமீபத்தில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். ஹால்டியா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி அபிஜித் கடுமையாக விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில் ‘‘பாஜக வேட்பாளர் அபிஜித் தெரிவித்த கருத்து பாலின ரீதியான தரக்குறைவான கருத்து. இது பெண்களுக்கு எதிரான மனநிலையை காட்டுவதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஓட்டுக்களை பெறுவதற்காக, பெண்களுக்கு எதிராக தரமற்ற கருத்துக்களை பாஜக வேட்பாளர்கள் கூறிவருகின்றனர்.
அபிஜித் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தரக்குறைவான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என பாஜக வேட்பாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இந்த வீடியோ போலியானது என பாஜக கூறியுள்ளது. இந்நிலையில் அபிஜித் கங்கோபத்யாய்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ‘‘முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி தாங்கள் தெரிவித்த கருத்து முறையற்றது, அநீதியானது, தரக்குறைவானது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதற்கு மே 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.