தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித் குமார் திடீர் மரணம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலைச்செல்வி, களப்பிரன், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், செந்தில்குமார், சத்தியநாதன், அபிமன்னன், வழக்கறிஞர் தங்கமணி ஆகியோர்களைக்கொண்ட கள ஆய்வுக்குழு, கள ஆய்வை மேற்கொண்டதில் கிடைக்கப்பெற்ற விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“கடலூர் மாவட்டம் பாபுகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சார்ந்தவர் அஜித் குமார். பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும் 2014-ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1,200 க்கு 1,142 மதிப்பெண் பெற்று தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கும் முதல் இரண்டு ஆண்டுகள் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வந்துள்ளார்.
சிறந்த மாணவனான அஜித்குமார், 5 ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டிய மருத்துவர் படிப்பை 9 ஆண்டுகள் கடந்த பின்னரும் பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அடுத்தடுத்து வந்த மாணவர்கள் உதவியோடு கல்லூரி விடுதியில் தங்கி தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16.3.2024 அன்று அவர் உயிரிழந்து விட்டதாக கல்லூரி நிர்வாகத்தால் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அலறித் துடித்து ஓடி வந்த ஏழைப் பெற்றோர்கள் உடலை பெற்றுக் கொண்டு தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று புகார் அளித்த நிலையில் சந்தேக மரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு (IPC (174)) செய்துள்ளனர்.
பட்டியலின மாணவரான அஜித் குமாரின் மரணம் பலத்த சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வுக்குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. எட்டு நபர்களைக்கொண்ட இக்குழு தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர், விடுதிக்காப்பாளர், விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவர்கள் உள்ளிட்டோரிடம் நீண்ட உரையாடல்களை நடத்தியது. “உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு வெளியில் இருந்து வேறு மருத்துவர்களை நியமித்தீர்களா?” என்றதற்கு
“திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
“அஜித்குமார் மருத்துவ படிப்பை முடிக்க முடிக்காததற்கு காரணம் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைத்தது தான் என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறதே?” என்றதற்கு,
“அவ்வாறு இல்லை (மதிப்பெண் சான்றிதழ்கள் காண்பித்தார்கள்) செய்முறை தேர்வில் மதிப்பெண்கள், தேர்ச்சிபெரும் அளவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது, எழுத்துத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதே தேர்ச்சி பெற முடியாமல் போனதற்கு காரணம்” என்றனர்.
“அஜித்குமார் திடீரென உயிரிழக்க என்ன காரணம்?” என்றதற்கு,
“பிரேத பரிசோதனையின் முதல் கட்ட அறிக்கையில் கணையம் பாதிப்படைந்ததால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, கணையம் பாதிக்கப்பட்டதற்கு அவர் ஆல்கஹால் அல்லது இதர போதைப்பொருட்கள் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம், மேலும் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் அவர் தங்கியிருந்த அறையிலேயே சிலர் சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அதில் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஒரு மருத்துவரையும் இணைத்து விடுகிறோம்” என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அஜித்குமாரின் உடற்கூராய்வு இறுதி அறிக்கை பெறப்பட்ட பின்னர் முழுமையான விவரங்கள் தெரியவரலாம். அதே நேரத்தில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கை காவல்துறை புலன் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். அஜித்குமாரின் தொலைபேசி உரையாடல்கள், அவரின் குறிப்பேடுகள், நண்பர்கள், விடுதிக்காப்பாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களையும் முழுமையாக விசாரித்திட வேண்டும் எனபதையே கள ஆய்வுக்குழு தனது முடிவாக தெரிவிக்கிறது. எப்படி இருந்தாலும் ஒரு பட்டியலின ஏழை மாணவனின் மரணம் ஆழ்ந்த துயரத்தை தருகிறது. அக்குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தன் குறைந்த வருமானத்தில் ஒரு மிகச்சிறந்த மாணவனை சமூகத்திற்கு வழங்கிய பெற்றோர்களுக்கு சடலமே இப்போது கிடைத்திருக்கிறது. இதற்கு ஒரு வகையில் கல்லூரி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்.
உண்மையில் போதைப்பொருள்தான் காரணம் என்றால், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ஏன் போதையில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் அளிக்கவில்லை. பெற்றோர்களுக்கு ஏன் உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. போதைப்பொருள்தான் காரணம் என்றால் அதற்கு நிர்வாகமும், காவல்துறையும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அஜித் குமாரின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்தோ, அல்லது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பொது நிவாரண நிதியிலிருந்தோ ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வுக்குழு தமிழ்நாடு அரசையும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறது” என்று கள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88