MI v LSG: போராடிய ரோஹித்; வெற்றியுடன் முடித்த லக்னோ! கடைசி இடத்தில் மும்பை முடிக்க யார் காரணம்?

கடைசி இடத்தில் முடித்துவிடக்கூடாது என்ற வேட்கையில் மும்பையும், நல்ல வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்ற முனைப்பில் லக்னோவும் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது இறுதி லீக் போட்டியில் சந்தித்தன. லக்னோ அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை என்றாலும் இந்தப் போட்டியில் 310 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் எனும் அளவுக்கு மோசமான நெட் ரன்ரேட்டை வைத்திருந்தார்கள். அதனால் இரு அணிகளுக்குமே இந்த சீசனில் கடைசிப் போட்டிதான். இந்த சீசன் இரு அணிகளுக்கும் ஏன் சிறப்பானதாக அமையவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகத்தான் இந்தப் போட்டியும் இருந்தது.

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். ஓப்பனிங் என்பது லக்னோவின் பெரும் தலைவலியாக இந்த சீசன் இருந்தது. ராகுலிடம் போதிய அதிரடி இல்லை. அதிரடி காட்டவேண்டிய டிகாக் ஓரிரு போட்டிகள் தவிர்த்து பெரும்பாலான போட்டிகளில் முதல் மூன்று ஓவர்களுக்குள் பெவிலியன் திரும்புவதை இந்த சீசனில் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இறுதி ஓவர்களில் வருபவர்கள் மீதுதான் மொத்த சுமையும் இருந்தது.

MI v LSG

இந்தப் போட்டியில் டிகாக் நீக்கப்பட்டு அவர் இடத்தில் ஆடவைக்கப்பட்டிருந்தார் தேவ்தத் படிக்கல். இந்த சீசனில் மிடில் ஆர்டரில் சில போட்டிகளில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரால் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை. அவரது ஆட்டம் பவர்பிளேவுக்கே பொருத்தமானதாக இருக்கும் என முதலில் இறக்கிவிடபட்டார். ஆனால் இங்கும் ரன்கள் எதுவும் அடிக்காமல் முதல் பந்திலேயே LBW ஆனார். நுவான் துஷாராவும் கொஞ்சம் கொஞ்சமாக மும்பையின் முன்னணி வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். என்ன சீசன்தான் முடிந்துவிட்டது!

விக்கெட்டும் விழுந்துவிட்டதால் ராகுல் எப்போதும் போல மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். இன்னொரு புறத்தில் ஸ்டாய்னிஸும் மெதுவாகவே தொடங்கினார். இந்த சீசனின் முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கரும் களமிறங்கியிருந்தார். தனி ஆளாக அணிக்காக உழைத்த பும்ராவுக்கு ஓய்வளித்திருந்தார்கள். முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நன்றாகவே பந்துவீசினார் அர்ஜுன். இருவரில் யாரவது ஒருத்தர் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் பொறுப்பை எடுத்துக்கொண்டு சில பவுண்டரிகளை அடித்துவிட்டு 28 ரன்களில் அவுட்டானார் ஸ்டாய்னிஸ். மீண்டும் ரன் வரத்து குறைந்தது. ஹூடாவும் பெரிதாகப் பங்களிக்காமல் நடையைக் கட்டினார்.

MI v LSG

10-வது ஓவரில் நிகோலஸ் பூரண் களமிறங்கினார். ‘இததான் இவ்வளவு நேரம் ஒட்ட வச்சிட்டு இருந்தீங்களாடா’ என்று புயல் வேகத்தில் ராகுல் ஸ்கோரை சில பந்துகளிலேயே ஓவர்டேக் செய்தார். பாரபட்சமின்றி அனைத்து பௌலர்களையும் விளாசினார். அதுவரை நன்றாகப் பந்து வீசியிருந்த அர்ஜுன் டெண்டுல்கர் 15-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர் விட்டுக்கொடுத்தார். தசைப்பிடிப்பு காரணமாக அவர் வெளியேற அடுத்த நான்கு பந்துகளை நமன் தீர் வீசினார். அதில் 17 ரன்கள் குவிக்கப்பட்டன. மொத்தம் அந்த ஓவரில் மட்டும் 29 ரன்கள். 170-ஏ கஷ்டம் என்ற நிலையிலிருந்து பூரணால் 200 ரன்களையே எளிதாக அடிக்கக்கூடிய இடத்திற்கு வந்துசேர்ந்தது லக்னோ. 17-வது ஓவரில் பூரண் அவுட்டாக (75(29)) வரிசையாக மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி ஓவரில் ஆயுஷ் பதோனி கடைசி ஓவரில் 19 ரன்களைக் குவித்து லக்னோவை 214 என்ற நல்ல ஸ்கோரை எட்டவைத்தார். கடைசி ஓவரை ரூமோரியோ ஷெப்பர்ட் வீசியிருந்தார்.

ஹர்திக்கின் ‘மாத்தி யோசி’ விளையாட்டு இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. ஓப்பனிங்கில் ஓரளவு நன்றாகவே ஆடிக்கொண்டிருந்த இஷான் கிஷனை பேட்டிங் ஆர்டரில் கீழே இறக்கிவிட்டு டெவால்ட் ப்ரேவிஸை ரோஹித்துடன் ஓப்பனிங் ஆட வைத்தார். ரோஹித்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இதுதான் கடைசி போட்டியாக இருக்கக்கூடும் என்பதால் முழு ஆதரவைக் காட்ட மைதானத்தில் குவிந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். அவர்களை ஏமாற்றவில்லை ஹிட்மேன். 215 என்ற இலக்கை எட்ட சிறப்பான பவர்பிளேவும் அவசியமானதாக இருந்தது. அதை அமைத்துக் கொடுத்தார். ப்ரேவிஸ் சற்றே திணறினாலும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் ரோஹித்துக்கு துணை நின்றார். இந்த இணை 52 பந்துகளில் 88 ரன்கள் குவித்தது.

MI v LSG

அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் டக்-அவுட்டாக மும்பையின் கையிலிருந்து போட்டி கொஞ்சம் கொஞ்சமாக நழுவ ஆரம்பித்தது. ரோஹித்தும் 38 பந்துகளில் 68 அடித்து ரவி பிஷ்னாய் பந்தில் அவுட்டானர். இஷான் கிஷனும் ஹர்திக்கும் ரன்களைச் சேர்க்கத் திணறினர். லக்னோ எளிதாக வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் கிளம்ப ஆரம்பித்தனர். கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் அடிக்க வேண்டும். இது தனது திறமையை காட்ட சரியான வாய்ப்பு என நினைத்த நமன்தீர் சிறப்பாக ஆடினார். கடைசி ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டபோதும் தன்னால் போட்டியை முடித்துக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். க்ருணால் பவுண்டரி லைனில் சிறப்பாக சிக்ஸ் ஒன்றைத் தடுக்க அந்தக் கனவும் தகர்ந்தது. சிறப்பாக ஆடியதற்கு நமன் தீர் பெயருக்கு ஒரு அரைசதம் கிடைத்தது. 62(28) என மிரட்டியிருந்தார் அவர்!

ஹர்திக் பாண்டியாவின் முடிவுகள் இந்தப் போட்டியிலும் பாதகமாகவே அமைந்தன. இஷான் கிஷன் கீழே இறக்கப்பட்டார். அவரால் ரன்களைக் குவிக்க முடியவில்லை. ரூமோரியோ ஷெப்பர்ட் களமிறக்கப்படவே இல்லை. அவர் துணை நின்றிருந்தால் நமன் தீர் வேலை இன்னும் எளிதாகியிருக்கும். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கும் இந்த சீசனில் கைகொடுக்கவில்லை. இந்தப் போட்டியில் ஒரே நல்ல விஷயம் ரோஹித் சிறப்பாக ஆடியதுதான். டி20 உலகக்கோப்பை மிக அருகிலிருக்கும் இந்த நேரத்தில் அவரது ஃபார்ம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

MI v LSG

ராகுல் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க அவர்களது சொதப்பலான டாப் ஆர்டர் பேட்டிங்கே காரணம். டெல்லிக்கு எதிரான முந்தைய போட்டியில் கூட யாரேனும் ஒருவர் அதிரடி காட்டியிருந்தால் வெற்றி கண்டிருக்க முடியும். பிளே-ஆஃப் வாய்ப்புடன் உயிர்ப்புடன் இருந்திருக்க முடியும்.

இரண்டு அணிகளுக்குமே இது மறக்கக்கூடிய ஒரு சீசனாகவே இருக்கிறது. வீரர்களை மாற்றுவதால் மட்டும் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடாது. மனநிலையில், முடிவெடுக்கும் திறனில் மாற்றங்கள் அடுத்த சீசனில் வர வேண்டும். ஏனென்றால் பேப்பரில் இரு அணிகளுமே வலுவான அணிகளாகவே இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.