அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி மழையினால் பாதிக்கப்படும் என்ற ஐயம் இருந்த நிலையில் மழையின் குறுக்கீடு இல்லாமல் எந்தத் தாமதமுமின்றி தொடங்கியிருந்தது. இந்தப் போட்டிக்கான டாஸில் இரு அணிகளின் கேப்டன்களுமே நன்றாகப் பேசியிருந்தனர். அவர்கள் பேசியவை இங்கே…
சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்தான் டாஸை வென்றிருந்தார். சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தார். டாஸில் அவர் பேசியவை இங்கே…
“நாங்கள் முதலில் பந்துவீசப்போகிறோம். மழைக்கான சூழல் இருக்கிறது. இப்படி ஒரு சமயத்தில் 2-3 ஓவர்களில் கிடைக்கும் பந்தின் மூவ்மெண்ட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருப்பதைப் போலத் தெரிகிறது. ஆனாலும் நாங்கள் இண்டண்டோடு ஆட முனைவோம். ஐ.பி.எல் தொடரில் ஓவ்வொரு ஆட்டமுமே கட்டாயம் வென்றாக வேண்டிய ஆட்டம்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொரு பந்தாக போட்டியை அணுகப்போகிறோம். எங்களுக்கான இலக்குகளை சிறிது சிறிதாக வைத்துக் கொண்டு அதில் வெற்றியை நோக்கி நகர முயற்சிகள் செய்யப் போகிறோம். இதற்கு முன்பே சில நெருக்கமான போட்டிகளை வென்றிருக்கிறோம். இந்தப் போட்டியில் மொயீன் இல்லை. அவருக்குப் பதில் சாண்ட்னர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
டு ப்ளெஸ்ஸி பேசுகையில், “டாஸில் தோற்றது பெரிய விஷயமில்லை. கடந்த 5 போட்டிகளையும் வென்றதன் மூலம் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம். எங்களின் ரசிகர்கள் முன்பாக கடைசிப்போட்டியில் ஆடுவதில் மகிழ்ச்சி” எனப் பேசியிருந்தார்.
திட்டமிட்டபடி 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. 7:30 மணிக்கு முதல் பந்தும் வீசப்பட்டுவிட்டது. 3 ஓவர்கள் முடித்திருந்தன. பெங்களூரு அணி 31 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில், திடீரென 7:44 மணிக்கு மழை கொட்டி தீர்க்க ஆரம்பித்தது. போட்டி தடைப்பட்டது. மைதானத்தில் தார்ப்பாய் விரிக்கப்பட்டது.
பின்னர் பத்தே நிமிடத்தில் மழை நின்று, அவுட் பீல்டில் விரிக்கப்பட்டிருந்த தார்ப்பாய்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மைதானத்தை உலர்த்தும் பணிகளும் நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி போட்டி தொடங்கிவிட்டதால் மழை வராதென நினைத்த ரசிகர்கள் சிறிது ஏமாற்றத்தில் உள்ளனர். இருப்பினும் பெங்களூரு மைதானம் அதன் வடிகால் அமைப்புக்கும், மைதானத்தை உலர்த்தும் உயர் ரக தொழில்நுட்பத்துக்கும் பெயர் போனது என்பதால் நம்பிக்கையுடன் போட்டியைக் காணக் காத்திருக்கின்றனர்.