RCB vs CSK Match Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டி மீதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் இருக்கிறது எனலாம். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு வர காரணம், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு அணிக்கே வாய்ப்புள்ள நிலையில், இரு அணிகளும் அதற்காக இன்று மோதுகிறது.
இருப்பினும் இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய வானிலை நிலவரப்படி போட்டி நடைபெற்றும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அதற்கு முன் மழை பெய்தாலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வடிகால் அமைப்புகள் நல்ல முறையில் இருக்கும் என கூறப்படுவதால் போட்டி குறைந்தபட்சம் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி போடும் கணக்கு…
அந்த நிலையில், போட்டி ஒரு வேளையில் 5 ஓவர்களாகவோ அல்லது 10 ஓவர்களாகவோ குறைக்கப்பட்டாலோ பெங்களூரு அணி வெற்றி பெறும் வாய்ப்பு அரிதாகிவிடும். ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட பெங்களூரு நெட் ரன்ரேட்டில் குறைவாக உள்ளது. சிஎஸ்கே 14 புள்ளிகளுடனும், ஆர்சிபி 12 புள்ளிகளுடனும் இருக்கிறது. எனவே, ஆர்சிபி வெற்றி பெற்றாலும் சிஎஸ்கேவை விட அதிக நெட் ரன்ரேட்டை பெற வேண்டும். அப்படியென்றால், ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மிச்சமிருக்கும் வகையிலோ இலக்கை எட்டினால் மட்டுமே அந்த அணியின் நெட் ரன்ரேட் சிஎஸ்கேவை விட அதிகமாகும்.
இது 20 ஓவர்களாக இருந்தாலும் சரி, 10 ஓவர்களாக இருந்தாலும் சரி, 5 ஓவர்களாக இருந்தாலும் எத்தனை ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டாலும் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மிச்சமிருக்கும் வகையிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
உதாரணம் இதோ!
உதாரணத்திற்கு ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தால், சிஎஸ்கேவை 182 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும்போது 11 பந்துகளை மிச்சம் வைத்து ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். இதேதான் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆர்சிபி 80 ரன்களை அடித்தால் 62 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் அல்லது 80 ரன்கள் இலக்கை துரத்தினால் ஆர்சிபி 3.5 ஓவர்களிலேயே வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது, 23 பந்துகளில் 80 ரன்களை குவிக்க வேண்டிய நிலை வரலாம்.
RCB Qualification Scenario for Playoffs in this IPL 2024: pic.twitter.com/k6P9otYZs7
— Tanuj Singh (@ImTanujSingh) May 17, 2024
கலக்கத்தில் ஆர்சிபி ரசிகர்கள்
மேலும் மழை வரக்கூடாது என ஆர்சிபி ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இதனால் சிஎஸ்கே தானாக 15 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். எனவே, போட்டி நடந்தே ஆக வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் கலக்கத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சிஎஸ்கேவின் கணக்கு இதுதான்
மாறாக சிஎஸ்கே ரசிகர்கள் மழை வந்தாலும் பிரச்னை இல்லைதான். அதேபோல், வெற்றி பெறவில்லை என்றாலும் நெட் ரன்ரேட்டை மட்டும் கணக்கிட்டு விளையாண்டு தோல்வியடைந்தாலும் பிளே ஆப் வாய்ப்பு உறுதிதான். சிஎஸ்கேவுக்கு இதில் பெரிய பிரச்னை இருக்காது. இன்றைய போட்டி மழையால் தடைபடாமல் 20 – 20 ஓவர்கள் தலா வீசப்பட்டு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் அணியே பிளே ஆப் செல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.