புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படத் தொடரான கார்ஃபீல்டின் அடுத்த பாகமாகத் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது `தி கார்ஃபீல்டு மூவி’ திரைப்படம்.
உலகமெங்கும் ரசிகர்களைக் கவர்ந்து வைத்திருக்கும் கார்ஃபீல்டு என்ற குறும்புத்தனமான பூனையை மையப்படுத்தியதுதான் இந்தத் திரைப்படத் தொடர். இந்த பிரான்சைஸின் முதல் படைப்பு குறும்படமாக 1982-ல் டிவியில் வெளிவந்தது. பிரபல கார்ட்டூனிஸ்டான ஜிம் டேவிஸின் காமிக்கில்தான் இந்த கார்ஃபீல்டு பூனை உயிர்பெற்றது.
குறும்புத் தனமான சோம்பேறி பூனையாக இருக்கும் கார்ஃபீல்டும் அதன் நெருங்கிய நண்பருமான ஓடி என்ற நாயும் கடத்தப்படுகின்றன. கடத்தப்பட்ட இடத்தில் தன்னைச் சிறு வயதில் விட்டுச் சென்ற தன்னுடைய தந்தை பூனையைக் காண்கிறது கார்ஃபீல்டு. இதனால் தந்தை மீது பயங்கரமான கோபத்திலும் இருக்கிறது கார்ஃபீல்டு பூனை. இதனைத் தாண்டி அங்கிருக்கும் ஜிங்க்ஸ் என்ற வில்லி பூனையானது கார்ஃபீல்டையும் அதனின் தந்தையையும் மிரட்டி ஓர் இடத்திற்குக் கொள்ளையடிக்க அனுப்புகிறது.
கொள்ளை அடிக்க சென்ற இடத்தில் கார்ஃபீல்டுக்குப் புதியதாக ஒரு காளை மாட்டின் நட்பு கிடைக்கிறது. அதற்கும் அதே இடத்தில் ஒரு முக்கியமான உதவி தேவைப்படுகிறது. இந்தக் கொள்ளை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததா, இருவருக்கும் தேவையான விஷயங்கள் கிடைத்ததா என்பதுதான் இந்த அனிமேஷன் திரைப்படத்தின் கதை.
வழக்கம் போல் சோம்பேறித்தனமாகவும் குறும்புத்தனமாகவும் சுற்றிச் சிரிக்க வைக்கிறது கார்ஃபீல்டு. இந்த சூர்யாவுக்குக் கிடைத்த தேவாவைப் போல கார்ஃபீல்டுக்கு தோளோடு தோள் கொடுத்து வலம் வருகிறது ‘ஓடி’. ‘மாயாண்டி குடும்பத்தார்’ மணிவண்ணன் அளவுக்கு கார்ஃபீல்டு மீது பாசத்தைப் பொழிகிறது தந்தை பூனையான விக். மேலும், காதலியின் நினைவில் ஏக்கத்துடன் நிற்கும் காளை ஓட்டோவின் கதாபாத்திரமும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கே வில்லி கதாபாத்திரமான ஜிங்க்ஸ் பூனை மீது கோபம் ஏற்படும் அளவிற்கு அந்தப் பாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அனிமேஷன் கதாபாத்திரத்திற்கும் ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். அனிமேஷன் திரைப்படங்களுக்குக் கதாபாத்திரமும் அதன் முகபாவனைகளும் எந்தளவிற்குப் பக்குவமாக வடிவமைக்கப்பட வேண்டியது முக்கியமோ அதே அளவிற்கு அந்தக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுப்பவர்களின் தொனியும் முக்கியம். இது போன்ற விஷயங்கள்தான் பார்வையாளர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும். இவற்றையெல்லாம் புரிந்து கச்சிதமாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் உச்ச நட்சத்திரங்கள்!
மார்வெல் திரைப்படங்களில் ஸ்டார் லார்ட்டாக வரும் கிறிஸ் பிராட்தான் கார்ஃபீல்டு பூனைக்குக் குரல் கொடுத்திருக்கிறார். தந்தை பூனை கதாபாத்திரத்திற்கு சீனியர் நடிகர் சாமுவேல் ஜாக்சன் குரல் கொடுத்திருக்கிறார்.
தந்தை சென்டிமென்ட் படங்களில் டெம்ப்ளேட்டாக இருக்கும் விஷயங்களை இதிலும் மறக்காமல் சேர்த்திருக்கிறார்கள். தந்தை பூனை பற்றித் தவறாக நினைத்துக் கொள்ளப்பட்ட விஷயத்தின் பிளாஷ்பேக் தேவையில்லாத ஒன்று. இப்படியான விஷயங்களெல்லாம் பரபரவென நகரும் திரைக்கதைக்கு வேகத்தடையாக வந்து அமைகின்றன.
அதே சமயம் படத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அட்டகாசமான காமெடி டிராக்கில் பயணித்து பார்வையாளர்களைக் கைதட்டிச் சிரிக்க வைக்கிறது அப்பா பூனை. இதைத் தாண்டி படத்தின் சாகச காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற லெவலுக்குத் திட்டமிட்டு அதிரடியாக வடிவமைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, க்ளைமாக்ஸில் வரும் ரயில் ஸ்டன்ட் காட்சிகளெல்லாம் பிரமாண்டத்தோடு பல மேஜிக்குகளையும் நிகழ்த்துகின்றன. தேவையான மீட்டருக்குப் பின்னணி இசையை அமைத்துச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார், இசையமைப்பாளர் ஜான் டெப்னி.
குழந்தைகளுக்குப் பிடித்தமான அனைத்து விஷயங்களையும் படத்தில் கோர்த்த இயக்குநர் மார்க் திண்டல் நிச்சயமாக இந்த சம்மரில் அவர்களின் அன்பை அள்ளி விடுவார்.