கடந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினார் விஜய்.
குறிப்பாக, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்துப் பாராட்டியது, கவனம் ஈர்த்தது. இதையெல்லாம் தாண்டி, ஒரு நிமிடம்கூட உட்காராமல் நின்றுகொண்டே மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டியது பலரையும் அசரவைத்தது. அதேபோல், இந்த வருடமும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சந்தித்து பரிசும் பாராட்டுகளையும் விஜய் வழங்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’இது உண்மைதானா?’ எனத் தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தோம்…
“தளபதி, மாணவர்கள் மேல ரொம்ப அக்கறை கொண்டவரா செயல்பட்டுக்கிட்டிருக்காரு. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், 25 பேர் கொண்ட குழுவினர் 234 தொகுதிவாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களைத் திரட்டிக்கிட்டிருக்கோம். குறிப்பாக, பெற்றோர் அவர்கள் குடும்பச்சூழல், அவர்களது எதிர்கால கல்வித்திட்டம், அவர்களின் கல்விக்கு எப்படி உதவுவது என்றெல்லாம் டீடெய்லா ரிப்போர்ட் போட்டுக்கிட்டிருக்கோம். ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைத்தான் சேகரிச்சுக்கிட்டிருக்கோம்.
குறிப்பா, ஒரு தொகுதியில் ரெண்டு பேரு மூணு பேரு ஒரே மார்க் எடுத்திருந்தா மூணு பேருக்குமே கொடுக்கமாட்டோம். அதுல, யார் தமிழ்ல அதிக மதிப்பெண் எடுத்திருக்காங்களோ அவங்களைத் தேர்ந்தெடுத்து பரிசும் பாராட்டும் வழங்கணும்னு முடிவு எடுத்திருக்கோம். முதலில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அது பற்றிய டீடெய்ல்களை கலெக்ட் பண்ணிக்கிட்டிருந்தோம். இப்போதான், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கு. இப்போ அதையும் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கோம்.
எல்லாம் முடிஞ்சதும் தளபதிக்கிட்ட பட்டியலைக் கொடுப்போம். அதற்குப்பிறகு, தேதியும் இடமும் முடிவு செய்யப்படும். அதேநேரம், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொள்ளும் சூழலுக்கு ஏற்பவே இந்தத் தேதி முடிவு செய்யப்படும். போனமுறை தளபதி பிறந்தநாள் நெருங்கும்போது கொடுத்தோம். ஆனா, இந்தமுறை தளபதி ‘கோட்’ படபிடிப்புல இருக்கிறதால ஜூலை 15-க்குள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தறதா திட்டம். அதேமாதிரி, கடந்த முறை வைர நெக்லஸ் கொடுத்தது தளபதியா முடிவு செஞ்சது. அதேமாதிரி, இந்த முறையும் தளபதி ஏதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பாரு. மிக முக்கியமா, தமிழ்நாட்டுல தேர்வு எழுதி பாஸ் பண்ணின திருநங்கைகளின் விவரங்களைச் சேகரிச்சிருக்கோம். மார்க் கொஞ்சம் கம்மியா இருந்தாலும் ரொம்ப ஏழ்மையான பின்னணியில் இருக்கிற மாணவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்க இருக்கிறோம்” என்கிறார்கள்.