அமேதி: நாட்டில் அரசியல் சாசனம் இல்லையென்றால் மக்களின் உரிமைகள் பறிபோகும் என உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கிஷோரி லால் சர்மாவுக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: 2024 மக்களவை தேர்தல் தனித்துவமானது. அரசியல் சாசனத்தை பாதுகாக்க நடைபெறும் போர். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுதுவோம், தூக்கி எறிவோம் என்று ஒரு அரசியல் கட்சியும், அதன் தலைவர்களும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். காந்தி, அம்பேத்கர், நேரு உள்ளிட்ட பெரும் தலைவர்கள் போற்றி பாதுகாத்த நமது அரசியலமைப்பு சாசனத்துக்கு ஆபத்து வந்துள்ளது.
அரசியலமைப்பு சாசனம் மாற்றப்பட்டால் நமது உரிமைகள் பறிபோகும். உங்கள் குரல், உங்கள் எதிர்காலம், உங்கள் சிந்தனை அனைத்தும் அதில்தான் பொதிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நில உரிமையாகட்டும், விவசாயிகளுக்கான உதவிகளாகட்டும், பசுமை புரட்சியாகட்டும் அனைத்தும் இந்த புத்தகத்தால்தான் சாத்தியமாகியுள்ளன (அப்போது அரசியல் சாசன நகலை ராகுல் காந்தி கையில் வைத்திருந்தார்).
பிரதமர் மோடி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார். இதை நம்மிடமிருந்து பறித்துவிட்டால், பொதுத் துறை இருக்காது, வேலைவாய்ப்பு கிடைக்காது, பணவீக்கம் அதிகரிக்கும், இடஒதுக்கீடு முடிவுக்கு வரும். அப்போது இந்தியாவில் 22 முதல் 25 பணக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள்.
அவர்கள் உரிமைகள் மட்டும் அரசியலமைப்பு சட்டம் இல்லாமல் பாதுகாக்கப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள், தாய்மார்கள், சகோதர மற்றும் சகோதரிகளின் உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “மக்களவை தேர்தலில் 140 இடங்களை பிடிக்கவே போராடும் நிலையில்தான் பாஜக உள்ளது என்றார். அமேதி தொகுதியில் மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.