அரூர்: தொடர் கனமழை காரணமாக சித்தேரி மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றை கடக்க முடியாமல் 9 கிராம மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சித்தேரி மலை பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அருவிபோல தண்ணீர் கொட்டி வரும் நிலை உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக வறண்டு இருந்த பல்வேறு சிற்றோடைகளிலும் தற்பொழுது வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள சித்தேரி ஊராட்சியில், கலசபாடி, அரசநத்தம், ஆலமரத்து வலசு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, பொய்க்குண்டல வலசு உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளன. சுமார் 4,500 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்கள் தங்களது மருத்துவம், கல்வி, அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காட்டுவழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இப்பாதைகளில் இரண்டு இடங்களில் காட்டாறுகள் ஓடுகின்றன. இதனால் மலை கிராம மக்கள் சமவெளி பகுதிக்கு வர முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றின் நடுவே கயிறு கட்டி அதனை பிடித்தவாறும், ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் அபாயகரமான சூழலில் ஆற்றைக் கடந்தும் மறுபக்கம் வருகின்றனர்.
வெள்ளநீர் முற்றிலும் வடியாத நிலையில் ஆற்றை கடந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழலும், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. சாலை மற்றும் பாலம் அமைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை பணிகள் நடைபெறாத சூழலில் விரைவில் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.