புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள கேஜ்ரிவால் வீட்டுக்கு ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஸ்வாதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பிபவ் குமார் மீது கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த 17-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. ஸ்வாதியின் வலது நெற்றி, வலது கன்னம், இடது காலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் நேற்று பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். அவரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே ஜாமீன் கோரி டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பிபவ் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது: மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி முதல்வரின் வீட்டில் இருந்து சிசிடிவி பதிவுகளை பெற்றுள்ளோம். அந்த பதிவுகளில் எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். கேஜ்ரிவாலின் வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய நிறுவனத்தின் உதவியுடன் முழுமையான சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்வோம்.
நேற்று முன்தினம் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு ஸ்வாதியை அழைத்துச் சென்று, தாக்குதல் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரித்தோம். முதல்வர் வீட்டில் இருந்த பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தனர்.