பாலஸ்தீன் நாட்டின்மீது கடந்த அரை வருடமாகப் போர் நடத்திவரும் இஸ்ரேலைக் கடுமையாக இரான் எதிர்த்துவருகிறது. இந்த நிலையில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இன்று விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனும் (Hossein Amir-Abdollahian) உடனிருந்தாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரில் அவருடன் யார் யார் பயணித்தனர் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. முன்னதாக, கிஸ்-கலாசி அணையைத் திறப்பதற்காக இப்ராஹிம் ரைசி கிழக்கு அஜர்பைஜானை இன்று காலை வந்தடைந்தார். தற்போது ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக வெளியாகும் தகவலில், இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருடன் பறந்த மற்ற ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக இலக்கை அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, இரான் அரசு தொலைக்காட்சி, இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரை மீட்புக் குழுவினர் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், இது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட பிறகே விபத்தா தாக்குதலா என்று தெரியவரும்.
இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் இருந்ததாகக் கூறப்படும் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கடந்த ஜனவரியில், “இஸ்ரேலின் இனப்படுகொலை போரில், போர் தளவாடங்கள், ஆயுதங்கள், அரசியல், ஊடக ஆதரவை அமெரிக்கா இன்று நிறுத்தினால், நெதன்யாகு 10 நிமிடங்கள் கூட உயிருடன் இருக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.