டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஈரான் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜோல்ஃபா என்ற நகரத்தின் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி அல்லது அவருடன் சென்ற அதிகாரிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
மீட்புப் படையினர் விபத்துப் பகுதியை அடைய முயற்சிப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் உள்துறை அமைச்சர் அஹமத் வாஹிதி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் கனமழையும், பனிமூட்டமும் நிலவுவதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் கான்வாயில் மொத்தம் மூன்று ஹெலிகாப்டர்கள் இருந்ததாகவும், அதில் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டதாகவும் தெரிகிறது.
அவற்றில் ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி தவிர்த்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீரப்துல்லாஹியான், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி மற்றும் சில மூத்த அதிகாரிகள் ஆகியோரும் ஹெலிகாப்டரில் இருந்துள்ளனர்.
இன்னொருபுறம் இந்த விபத்துக்கு பின்னால் இஸ்ரேலின் சதிச் செயல் இருக்கலாம் என்கிற ரீதியில் ஒரு விவாதமும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன.