ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த விராட் கோலி

பெங்களூரு,

14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. அத்துடன் அந்த அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்து அசத்தியது. சென்னை அணி 7-வது தோல்வியை சந்தித்து 14 புள்ளிகளிலேயே நீடித்தது.

சம புள்ளிகளில் இருந்தாலும் ரன்-ரேட் அடிப்படையில், சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 3-வது முறையாகும்.

ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து விராட் கோலி சாதனை

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விராட்கோலி 47 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல்.-ல் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற்றார். அவருக்கு அடித்தபடியாக ரோகித் சர்மா மும்பை வான்கடே மைதானத்தில் 2,295 ரன்கள் (80 ஆட்டங்கள்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

முன்னதாக விராட்கோலி 33 ரன்னை தொட்ட போது ஒட்டு மொத்த 20 ஓவர் போட்டியில் இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட்கோலி மொத்தம் 268 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா 8,008 ரன்கள் (300 ஆட்டங்கள்) எடுத்திருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.