மதுரை: மதுரையில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு எப்போதும் இல்லாதவகையில் கோடை வெயில் இந்த ஆண்டு பொதுமக்களை வாட்டி வதைத்தது. கடைசி இரண்டு வாரம் கத்திரி வெயிலில் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியவில்லை. இரவில் கடும் புழுக்கமும், பகலில் வெயிலின் கொடுமையாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெயிலின் பாதிப்பால் பொதுமக்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பலர் சத்தமில்லாமல் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு போதுமான பருவமழை பெய்யாததால் நீர்நிலைகளில் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மதுரையில் கோடை மழை அவ்வப்போது பெய்யத்தொடங்கியது. கோடை வெயிலின் தாக்கமும் படிபடியாக குறைந்தது. இன்று மாலை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மதுரை நகர் முழுவதும் கன மழை பெய்தது. ஏற்கணவே மதுரையில் சில மணி நேரம் மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும். ஆனால், சமீபகாலத்தில் மிக தீவிரமான கனமழை பெய்ததால் ஆங்காங்கே தரைப்பாலங்கள், சாலைகள் தண்ணீரில் மூழ்கின. மேடு, பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை தொடர்ந்து ஓட்ட முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
கே.புதூரில் அழகர் சாலையில் பல அடி தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் அதில் சென்ற வாகனங்கள் பழுதடைந்தன. ஆட்டோக்கள், தண்ணீரில் செல்ல முடியாமல் இடையிலேயே நின்றன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் மக்கள், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். பல இடங்களில் மரங்கள் நொடிந்து விழுந்தன.
கே.கே.நகரில் ஒரு பனைமரம், பொதுமக்கள் கண் எதிரே, இடி, மின்னல் தாக்கி கொட்டும் மழையில் தீப்பொறி பறக்க எரிந்து கீழே விழுந்தது. மீனாட்சியம்மன் மாசி வீதிகள், வெளி வீதிகளிலும் வாகனங்களை மூழ்கடிக்கும் வகையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஊர் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். மழையால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
கோரிப்பாளையத்தில் மேம்பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதால் நேற்று மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள், சாலையை கடந்து செல்ல முடியாமல் கொட்டும் மழையில் ஒரே இடத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் சாலைகளில் மழைநீர் தேங்குவதும் மக்கள் சிரமப்படுவதும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சியும் தெரிகிறது. அவர்கள் இதுபோன்ற சாலைகளை கணக்கெடுத்து மழைநீர் வழிந்தோடுவதற்கும், மழைநீர் தேங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர்கள் அந்த நடவடிக்கை எடுக்காதால் மதுரை மாநகரில் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாமல் சில மணிநேர மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் போக்குவரத்து முடக்கமும், நெரிசலும் ஏற்படுகிறது.