கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (33). இவரது கணவர் வெங்கடேஷ். ஐ.டி ஊழியர்களான இந்தத் தம்பதி சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயது மற்றும் 7 மாதத்தில் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் 7 மாதக் கைக் குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. அதில் ரம்யாவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளும் இருந்துள்ளன. இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் அதிலிருந்து மீள முடியாததால், ரம்யா காரமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 15 நாள்களாக கணவர் மற்றும் குழந்தையுடன் அங்கிருந்துள்ளார்.
நேற்று மாலை ரம்யாவின் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் வீடு திரும்பியபோது, ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த காரமடை போலீஸ், ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். ரம்யாவின் தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.