சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழை பெய்து வரும் நிலையில், மே 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை தலா 13 செமீ மழை பதிவாகி இருந்தது. ஞாயிறன்று அதிகபட்சமாக திருண்ணாமலை மாவட்டம் ஜமுனாமர்தூரில் 12 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 10 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் வடப்புதுப்பட்டு, ஆம்பூர் ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (மே 19) முதல் மே 21-ம் தேதி வரை தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் அதிகனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என எச்சரித்துள்ளது. இன்று தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் அடுத்த 36 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வரும் 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.