தற்கொலைகள் தொடர்வதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகள் தொடர்வதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராமையா புகலா, ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்றதிறமை சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே, அந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று தமிழகஅரசை வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்களைக் காக்க வேண்டிய தமிழகஅரசு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கத் துடிக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வை அணுகி, இதுகுறித்த வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டுவரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.