திருவனந்தபுரம்: நம் நாட்டில் உள்ள இளைஞர்களை, கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உடியனுர் தேவி கோயிலில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சோம்நாத்துக்கு, முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர் வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட பின்னர் சோம்நாத் பேசியதாவது:
கோயில் என்பது முதியோர்கள் வந்து கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் இடமாக இருக்கக்கூடாது. ஆனால், கோயில்கள் சமூகத்தை மாற்றியமைக்கும் இடமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள கோயில் நிர்வாகங்கள் இளைஞர்களை கோயில்களுக்கு ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.
இந்த விருது வழங்கும் விழாவுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறைந்த அளவிலேயே இங்கு இளைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்களைக் கோயில்களுக்கு ஈர்க்கும் வகையில் கோயில் நிர்வாகங்கள் செயல்படுவதற்கு முயற்சி செய்யவேண்டும். இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க அங்கு நூலகங்களை நாம் ஏன் அமைக்கக்கூடாது?
இதுபோன்ற முயற்சி இளைஞர்களை கோயில்களுக்கு ஈர்க்கவும், மாலை நேரங்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.