பெங்களூரு: மஜத கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் ரூ.100 கோடி தருவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என்று பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.
இதுதொடர்பாக 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டு பணிப்பெண் அளித்த புகாரில் தேவகவுடாவின் மூத்த மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா (66) கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை கைது செய்யும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவரது ஆபாச வீடியோக்கள் வெளியானதன் பின்னணியில் இருப்பதாக பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடாவை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீஸாரின் வாகனத்தில் இருந்தபடி தேவராஜ் கவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆபாச வீடியோ வெளியானதில் மூளையாக செயல்பட்டதே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்தான்.
ஆபாச வீடியோக்களை வெளியிட டி.கே.சிவகுமார் தலைமையில் அமைச்சர்கள் கிருஷ்ண பைரேகவுடா, செலுவராயசாமி, பிரியங்க் கார்கே உள்ளிட்ட 4 அமைச்சர்கள் குழுவாக செயல்பட்டனர். ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியிட ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமே கவுடா பேரம் பேசினார்.
ஆபாச வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக டி.கே.சிவகுமார் என்னை அழைத்து ரூ.100 கோடி பேரம் பேசினார். டி.கே.சிவகுமார் என்னிடம் பேசிய ஆடியோ உரையாடல் என்னிடம் உள்ளது.
இது வெளியே வந்தால் காங்கிரஸ் ஆட்சியே இருக்காது. இதனால்தான் என் மீது பொய்யான வழக்கை போட்டு சிறையில் வைத்துள்ளனர்.
ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.