அம்பாலா: மத்தியில் வலுவான அரசு அமைவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஹரியாணாவின் அம்பாலா, சோனிபட்டில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஹரியாணாவின் மறுபெயர் துணிச்சல். நான் ஹரியாணா கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வலுவாக இருக்கிறேன்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். மத்தியில் வலுவான அரசு பதவியேற்றது. இதன் காரணமாக 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் தற்போது வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறது.
நாட்டின் முதல் ஊழலை அரங்கேற்றியது காங்கிரஸ் கட்சி. கடந்த 1947-48-ம் ஆண்டுகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போதைய காங்கிரஸ் அரசு இந்திய ராணுவத்துக்காக ஜீப்புகளை வாங்கியது. அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது.
போபர்ஸ் ஊழல், நீர்மூழ்கி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என முப்படைகளிலும் காங்கிரஸ் அரசு அடுத்தடுத்து ஊழல்களில் ஈடுபட்டது. ராணுவ வீரர்களுக்கு உரிய சீருடைகள் கிடைக்கவில்லை. நவீன துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. இதுபோன்ற ஊழல்களால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராணுவத்தின் வலிமைகுறைந்தது. கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது.முப்படைகளும் நவீனமயமாக்கப்பட்டது. ராணுவத்தில் ஒரே பதவி,ஒரே ஓய்வூதியம் திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டது. இப்போது இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் அஞ்சுகிறது. ஒரு காலத்தில் கையில் வெடிகுண்டை வைத்து மிரட்டிய பாகிஸ்தான், இப்போது கையில் பாத்திரம் ஏந்தி தர்மம் கேட்கிறது. தற்போதைய மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக செயல்பட ஒருமுறைக்கு 100 முறை எதிரிகள் சிந்திப்பார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் பெருகின. அந்த கட்சி சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து தலைவர்களுமே ஊழல்வாதிகள். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நாட்டின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் பேசினார்.