“ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜாம்ஷெட்பூர்: ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுவதாகவும், அவரது பேச்சால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடுகளைச் செய்ய தொழிலதிபர்கள் விரும்பவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை பரம்பரைச் சொத்தாகப் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியின் இளவரசர்(ராகுல் காந்தி) பயன்படுத்தும் மொழியைப் பார்த்தால் அக்கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்பாக தொழிலதிபர்கள் 50 முறையாவது யோசிப்பார்கள். இளவரசர், மாவோயிஸ்ட்கள் பேசும் மொழியை பயன்படுத்துகிறார். புதுமையான முறையில் பணத்தை பறிக்க திட்டமிடுகிறார்.

காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளுக்கு வளர்ச்சியை பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களின் ஒரே வேலை மீண்டும் மீண்டும் சத்தமாக பொய்யைச் சொல்வது மட்டும் தான். எல்லா இடங்களிலும் ஏழைகளிடம் எக்ஸ்-ரே செய்து, அவர்களின் வளங்களைக் கொள்ளையடிப்பது தான் அவர்களின் ஒரே நோக்கம்.

எஸ்.சி., எஸ்.டி., மக்களின் இடஒதுக்கீட்டை அபகரிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். தினமும் அவர்கள் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள். அதைத் தவிர அவர்களால் வேறு எதையும் யோசிக்க முடியாது. ஒட்டுமொத்த நாடும் அவர்களின் உண்மை முகத்தை அறிந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு நான் சவால் விடுகிறேன். இது எனது அறிக்கை இல்லை. அவர்களின் இளவரசர் தொழில்துறை, தொழிலதிபர்கள் மற்றும் முதலீடுகளுக்கு எதிராக இருந்தால் எந்தத் தொழிலதிபர்தான் அந்த மாநிலங்களில் முதலீடு செய்ய விரும்புவார்? அந்த மாநிலத்தின் இளைஞர்களின் நிலை என்னவாகும்?

என்னிடம் வரும் தொழிலதிபர்கள் எல்லாம், அந்த மாநிலங்களில் அவர்களுக்கு எதிரான சித்தாந்தங்கள் நிலவுவதாலும், காங்கிரஸ் இளவரசருக்கு இருக்கும் அதே எண்ணம்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கும் என்பதால் அங்கு முதலீடு செய்ய அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர்” இவ்வாறு பிரதமர் பேசினார்.

மேலும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தியின் முடிவினைச் சாடிய பிரதமர், “ரேபரேலி தொகுதிக்கு விரைந்திருக்கும் காங்கிரஸ் இளவரசர் இது என் அம்மாவின் தொகுதி என்று கூறுகிறார். ஒரு எட்டு வயது பள்ளிச் சிறுவன்கூட இதைச் சொல்ல மாட்டான்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.