சென்னை: ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.
இதை நம்பி பலர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதனிடையே, இந்த திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையை துண்டி, பண மோசடியில் அந்நிறுவனம் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். விசாரணையில் அந்த நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரூசோ உட்பட 10 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் ரூசோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையில், அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு எனவும், இதனால் அவர் வெளியே இவ்வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களை கலைத்து விடலாம் எனவும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இவ்வாதங்களைக் கேட்ட நீதிபதி, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவாகிவிட்டார். பின்னர், அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரூசோ, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பிடிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ஏற்கனவே ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடிக்கு அதிகமான பணம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.