மறைந்த நடிகை ஶ்ரீதேவி – போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான உருவாகி வருகிறார்.
2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், தனது 13 வயதில் தான் பாலியல் ரீதியான கிண்டல்களை எதிர்கொண்டதாகவும், தனது புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சிலர் வெளியிட, அதைப் பார்த்து பள்ளி நண்பர்கள் சிரித்தது குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் ஜான்வி கபூர், “நான் 13 வயதாக இருக்கும்போது நான் என் அம்மா, அப்பாவுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்போதுதான் என்னுடைய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானது. சமூக வலைதளங்கள் அப்போதுதான் பிரபலமாகி வந்தது. அந்த சமயத்தில் என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையதளங்களில் வைரல் செய்திருந்தனர்.
ஆபாச தளம் ஒன்றில் அந்தப் புகைப்படத்தை பதிவேற்றியிருந்தனர். என் நண்பர்கள், பள்ளியில் என்னுடன் படிப்பவர்களெல்லாம் அதைப் பார்த்துச் சிரித்தார்கள். என் சிறுவயதில் நான் எதிர்கொண்ட முதல் பாலியல் ரீதியான கிண்டல் அதுதான். அதிலிருந்து மீண்டுவர நான் நிறைய கஷ்டப்பட்டேன்.
ஒரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதும், அணியும் உடையை வைத்து பெண்களின் ஒழுக்கத்தையும், சுபாவத்தையும் தவறாகப் பேசுவதும் அநியாயமானது. ஒவ்வொரு பெண்ணும் இதுபோல் பல பாலியல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.