வீட்டு மாடியில் பலரும் காய்கறிகள் முதல் பழங்கள் வரை வளர்ப்பதுண்டு. இவர்களில் பலரும் தங்களது வீட்டுத் தேவைகளுக்காக விளைவித்து வரும் நிலையில், சிலர் அதனை வெற்றிகரமான பிஸினஸாக மாற்றியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியின் சங்கரபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஜோசப் லோபோ. இவர் பண்ணைகள் மற்றும் நிலங்களைப் புதுப்பிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தனது மாடித் தோட்டத்தில் உலகின் விலை உயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்றாக அறியப்படும் மியாசாகி மாம்பழங்களை (Miyazaki mango) வெற்றிகரமாக வளர்த்துள்ளார்.
இந்த மாம்பழங்கள் அவற்றின் சுவை மற்றும் மருத்துவ குணத்திற்காகப் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த பழங்கள் கிலோவுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்கப்படுகின்றன.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மியாசாகி மாமரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு, அவற்றில் பூக்கள் பூத்த போதிலும், அவை காய்களாக வளரவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு தோராயமாக ஏழு மாம்பழங்கள் வளர்ந்துள்ளன. ஆனால், சாதகமற்ற வானிலை மீண்டும் ஒரு சவாலாக அமைந்தது.
இவர் மியாசாகி மாம்பழங்களோடு, வெள்ளை ஜாவா பிளம், பிரேசிலியன் செர்ரிகள், தைவான் ஆரஞ்சு என பல அயல்நாட்டுப் பழங்களையும் தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.
இது குறித்து ஜோசப் லோபோ கூறுகையில், “எனது தோட்டத்தில் உள்ள மியாசாகி மாம்பழங்களின் தோற்றம், அளவு மற்றும் சுவை மல்லிகா ரக மாம்பழங்களை ஒத்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு அறுவடைக்கும் பழத்தின் சுவை அதிகரிக்கிறது.
வழக்கமாக மியாசகி மாம்பழங்கள் பழுக்காதபோது ஊதா நிறமாகவும், பழுத்தவுடன் சிவப்பாகவும் மாறும். ஜப்பானில் இப்படித்தான் மியாசகி பழங்கள் இருக்கின்றன. கடலோரப் பகுதியான உடுப்பியில் ஈரப்பதம் மற்றும் உப்புத்தன்மை காரணமாக மாம்பழத்தின் நிறத்தில் வேறுபாடு இருக்கிறது. வருங்காலங்களில் மாம்பழத்தின் தரம் மற்றும் நிறம் மேம்படும் என்று நம்புகிறேன்” என்றார்.