தமிழகப் பள்ளிக்கல்வித்துறை Educational Management Information System எனப்படும் EMIS என்ற தளத்தின் வழியாக பள்ளிச்செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வருகிறது
வருகைப்பதிவு தொடங்கி மாணவர்களின் உடல் நலம், மனநலம் வரை அனைத்துத் தகவல்களையும் அந்தத் தளத்தில் பதிவிட வேண்டும். தனியார் பள்ளிகளும்கூட EMIS தளத்தில் தகவல்களைப் பதிவு செய்வது அவசியம்.
இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்வதோடு, கற்றல் குறைபாடு, பார்வைக் குறைபாடு போன்ற மாணவர்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும் இடை நிற்றலைத் தடுக்கவும் முடியும். ஒரு மாணவன் நான்கு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றால் உடனடியாக ஆப்பில் கோடிட்டுக் காட்டிவிடும். உடனடியாக என் மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்று கேள்வி வரும். மாணவனின் நிலையை ஆய்வு செய்து அதற்கு ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும். பல்வேறு தடைகளுக்கு மத்தியில் படிப்படியாக EMIS தளத்தை மேம்படுத்தி வருகிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. உண்மையில் இது மிகவும் ஆக்கப்பூர்வமான பணி.
ஆனால், இது ஆசிரியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. தவிர, எழுத்தர்கள், உதவியாளர்கள் பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளும் அதிகரித்துவிட்டன. இந்தச்சூழலில் தினமும் EMIS தளத்தில் டேட்டா என்ட்ரி செய்வது மிகப்பெரும் சுமையாக மாறிவிட்டதாக ஆசிரியர்கள் குமுறுகிறார்கள். பல பள்ளிகளுக்கு இந்தாண்டுதான் இணைய இணைப்பே வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இண்டர்நெட் கிடைக்காததால் ஆசிரியர்கள் மொபைலை எடுத்துக்கொண்டு மைதானத்தில் நடந்து திரிவதைப் பார்க்கமுடிகிறது. இதனால் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். இந்த டேட்டா என்ட்ரி பணிக்காவது ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
“EMIS தளத்தில் பதிவு செய்யப்படுகிற விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்திருக்கும் மிகச்சிறந்த பணி இது. ஆனால் இதை ஆசிரியர்களே செய்யவேண்டும் என்பது மிகப்பெரிய சுமை. EMIS தளத்தில் மாணவர்களின் எடை, உயரம், மனநலம் உள்ளிட்ட அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான 24 விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். அமரும் முறை, பேசும் முறை வரைக்கும் அதில் பதிவு செய்யவேண்டும். முன்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 14 பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது சைக்கிள், லேப் டாப் கொடுப்பதில்லை. சீருடை, காலணி உள்பட 11 பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அவை அனைத்தையும் EMIS தளத்தில் என்ட்ரி செய்யவேண்டும். மாதத் தேர்வுகள் உள்பட ஒவ்வொரு தேர்விலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைத் தனித்தனியாக என்ட்ரி போட வேண்டும். தினமும் மாணவர்களின் வருகைப் பதிவையும் பதிவு செய்யவேண்டும். தினமும் எத்தனை மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டார்கள், மதியம் எத்தனை பேர் சாப்பிடப் போகிறார்கள் என்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும். மாதந்தோறும் வானவில் மன்றப் போட்டிகள், கலைத்திருவிழாக்களில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்களின் தனித்தன்மைகள், திறமைகளைப் பற்றி பதிவு செய்யவேண்டும். இதுமாதிரி அட்மிஷன், டிசி, உதவித்தொகை என அன்றாடம் ஏகப்பட்ட செய்திகளைப் பதிவு செய்யவேண்டும்.
திடீரென ‘இந்தத் தகவல் மிகமிக அவசரம். இன்று மாலைக்குள் EMIS-ல் பதிவு செய்யவும்’ என்று தகவல் வரும். எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு அந்தத் தகவலைத் தேடி அலைய வேண்டும். எல்லோரும் அந்த பேஜில் பதிவு செய்வதால் சர்வர் முடங்கிவிடும். இது மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்குகிறது என்கிறார்கள்” ஆசிரியர்கள். அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1.35 கோடி பெற்றோரின் மொபைல் எண்களும் EMIS தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்தாண்டு முதல் பள்ளி செயல்பாடுகள், தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், பிற பள்ளி சார்ந்த செய்திகளை பெற்றோருக்கு மொபைல் வழியாக நேரடியாகத் தெரியப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்காக ஒவ்வொரு எண்ணையும் சரி பார்க்கும் பணி சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்பணியும் ஆசிரியர்கள் கையிலேயே தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு எண்ணுக்கும் ஓ.டி.பி அனுப்பப்படுகிறது. ஆசிரியர்கள் பெற்றோருக்கு போன் செய்து, விசாரித்து உறுதி செய்து, ஓ.டி.பியைக் கேட்டு வாங்கி EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகு மொபைல் எண் உறுதி செய்யப்படும். இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்களை ஆசிரியர்கள் எதிர்கொள்கிறார்கள். “உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை மூன்றாம் நபருக்குச் சொல்லாதீர்கள்” என்று பத்திரிகைகள், வானொலிகள் தொடங்கி எல்லாத் தளங்களிலும் மத்திய மாநில அரசுகள் விளம்பரம் செய்கின்றன. பிறகு, அரசே “பெற்றோருக்கு வரும் ஓ.டி.பி கேட்டு வாங்கிப் பதிவு செய்யுங்கள்” என்று சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல பெற்றோர், ஓ.டி.பியைச் சொல்ல மறுக்கிறார்கள். ஆசிரியர்கள் மன்றாடிக் கேட்டும் மறுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது என்கிறார் ஒரு ஆசிரியர். தவிர நிறைய பெற்றோரிடம் மொபைல் இல்லை. முன்பு பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்களின் எண்களை தந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து ஓடிபி வாங்குவதும் சவாலாக இருக்கிறது. நிறைய பெற்றோர் மொபைல் எண்ணை மாற்றி விட்டார்கள்.
சில பெற்றோருக்கு ஓ.டி.பியே பார்க்கத் தெரியவில்லை. யாரையாவது அழைத்துக் காண்பித்து ஓ.டி.பி சொல்வதற்குள் பழைய ஓ.டி.பி எக்ஸ்பயரி ஆகிவிடுகிறது. சிலர் “நேரில் வந்து வாங்கிக்கோங்க” என்று சொல்லிவிட்டு வைத்துவிடுகிறார்கள். நிறைய பேருக்கு எம்.டி ஓ.டி.பி செல்வதும் குழப்பத்தை அதிகரித்திருக்கிறது. “பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்திருக்கும் EMIS பணி காலத்தின் தேவை. ஆசிரியர்களுக்கு இதுமாதிரியான பணிச்சுமையைக் குறைத்து அவர்களை கற்றல் பணிகளில் முழுமையாகச் செயல்பட விடுவதும் முக்கியமானது…” என்ற ஆசிரியர்களின் குரலையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!