லேட்டஸ்ட்டாக, தனது ஸ்விஃப்ட் வேரியன்ட்டின் அப்டேட் வெர்ஷனைக் கொண்டு வந்தது மாருதி சுஸூகி. இது ஸ்விஃப்ட்டின் 4-வது ஜென் மாடல்.
‛என்னப்பா இது, அப்டேட்னா கூடத்தான செய்யணும்; இதென்ன இறங்கியிருக்கு’ என்று கமென்ட் அடித்தார்கள் வாடிக்கையாளர்கள். ஆம், 4 சிலிண்டராக இருந்த ஸ்விஃப்ட்டின் இன்ஜினை, 3 சிலிண்டராக்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.
இந்தப் புது இன்ஜினின் பெயர் Z12E. இதை Z சீரிஸ் இன்ஜின் என்றும் சொல்லலாம். கமென்ட்டுகளைக் கண்டுகொள்ளவில்லை மாருதி; காரணம், இதன் மைலேஜ். ஒரு சிலிண்டரைக் குறைத்ததால் சக்தியும் பெர்ஃபாமன்ஸும் குறையும்தான் (82bhp பவர், 112Nm டார்க்); ஆனால், மைலேஜ்? அதைத்தானே எதிர்பார்க்கிறது மாருதி! 3-வது ஜென் மாடலைவிட இந்த 3 சிலிண்டர், 3 கிமீ எக்ஸ்ட்ரா மைலேஜ் தரும்படி வடிவமைத்திருக்கிறது மாருதி.
இந்தப் புது ஸ்விஃப்ட்டில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், விலை மலிவான மைலேஜ் தரக்கூடிய AMT கியர்பாக்ஸும் இருக்கின்றன.
இப்போது இன்னும் ஓர் அதகளம். ஆம், 4-வது ஜென் ஸ்விஃப்ட்டின் அதே 1.2லி NA பெட்ரோல் Z சீரிஸ் இன்ஜினில், CNG வேரியன்ட்டைக் கொண்டுவரப் போகிறார்கள். இதிலென்ன அதகளம், புதுமை என்கிறீர்களா? ஒரு புது சீரிஸ் இன்ஜினில், CNG வேரியன்ட்டைக் கொண்டுவரும் முதல் கார் ஸ்விஃப்ட்தான்.
ஏற்கெனவே பவரும் டார்க்கும் குறைந்திருக்கும் ஸ்விஃப்ட்டின் CNG வேரியன்ட்டில் இன்னும் இந்தச் சமாச்சாரங்கள் குறையும். அதனால், ஓட்டுவதற்கு நிச்சயம் பெப்பியாக இருக்காது போல் தெரிகிறது. சிட்டி ரைடிங்குக்கு மட்டும் செமையாக இருக்கலாம். அதனால் என்ன, மைலேஜ் கன்னாபின்னாவெனக் கிடைக்குமே!
ஆம், இப்போதைய லேட்டஸ்ட் 4-வது ஜென் ஸ்விஃப்ட்டின் அராய் மைலேஜ் 24.8 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது மாருதி. இதுவே ஆட்டோமேட்டிக்குக்கு 25.75 கிமீ என்கிறார்கள். (ரியல் டைம் மைலேஜுக்குக் கொஞ்சம் காத்திருங்கள். அல்லது, நீங்கள் ஸ்விஃப்ட் புக் செய்தீர்கள் என்றால் தகவல் தெரிவியுங்கள்.)
இந்த சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் எத்தனை தெரியுமா? லிட்டருக்கு, அதாவது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 32 கிமீ மைலேஜ் கிடைக்கும் என்று க்ளெய்ம் செய்கிறது.
ரியல் டைமில் இது 30 கிமீ கொடுத்தாலே சூப்பர்தானே! அதாவது, ஒரு 250சிசி பைக் கொடுக்கும் மைலேஜ், ஒரு 1,200 சிசி கார் கொடுக்கிறது என்பது அதகளம்தானே! என்ன, இது புது ஸ்விஃப்ட்டைவிட சுமார் 95,000 ரூபாய் விலை அதிகமாக இருக்கும்; அதாவது எக்ஸ் ஷோரூமில்!