கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் இயல்பைவிட மிக அதிகமாகக் கொளுத்தி எடுத்து. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. மேலும், வரும் 21-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (20.05.24) காலை நிலவரப்படி தமிழகத்தின் 3 மாவட்டங்களில் 0.72 செ.மீ மழைப் பதிவாகியிருக்கிறது.
தொடர் கனமழை காரணமாகக் கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நிலையும் ஏற்பட்டது. வரும் 22-ம் தேதி வரை நெல்லை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் குழுக்கள்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இடிமின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. மேலும் மழை காரணமாகக் கால்நடை இறப்பு, வீடு, குடிசைகள் சேதமும் ஏற்பட்டிருப்பதாகப் பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி பகுதிகளைச் சேர்ந்த 2.66 கோடி பேரின் செல்போனுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் முன்னெச்சரிக்கையாக குறுந்தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதோடு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய பத்து குழுக்கள், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் தயார் நிலையில் இருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் இன்றுவரை கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதனால், நீலகிரிக்குச் சுற்றுலாவுக்கு வருபவர்கள் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி நீலகிரிக்குப் பொதுமக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்க்க முடிந்தால் தவிர்க்கலாம் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb