ஜகர்த்தா: இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் அந்த நாட்டுக்கு பயணித்தார்.
இதன் மூலம் சுமார் பல ஆயிரம் தீவு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலை தூரங்களில் உள்ள அந்தப் பகுதிகளில் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது ஸ்டார்லிங்க். இதன் தொடக்க விழாவில் இணைய சேவையின் வேகமும் பரிசோதிக்கப்பட்டது.
“தொலைதூர மருத்துவ உதவிகளுக்கு இது மிகவும் உதவும். இணையவழி கல்வி பெறவும் நல்வாய்ப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இணைய சேவைக்கான பயன்பாடு கிடைத்தால் யார் வேண்டுமானாலும் தங்களது தயாரிப்புகளை உலகில் விற்பனை செய்ய முடியும். இது மக்களுக்கு சிறந்த வகையில் பயன் தரும் என நான் நம்புகிறேன்” என ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத் தலைவர் மஸ்க் தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க்: அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 70 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். தற்போது ஸ்பேஸ்-எக்ஸின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது.
அந்த வகையில் இதன் சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் டவர் (செல்போன் சிக்னல் கோபுரங்கள்) சார்ந்த நெட்வொர்க் சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.