தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அந்நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஈரான் நாட்டின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்தவர்.
ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஈரானின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்த முகமது மொக்பரை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்து ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனி அறிவித்துள்ளார். மேலும், இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அலி காமெனி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து முகமது மொக்பர் செயல்பட உள்ளார். இக்குழு அடுத்த 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
முகமது மொக்பர் யார்?: 60 வயதாகும் முகமது மொக்பர், இப்ராஹிம் ரெய்சியை போலவே ஈரான் நாட்டின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனிக்கு நெருக்கமான நபர். அரசியல் அனுபவமிக்க இவர், ஈரான் அரசியல் அதிகாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவராக அறியப்படுகிறார். ஈரான் நாட்டு முதலீட்டு நிதி அமைப்பான செட்டாட் (Setad) அமைப்பின் தலைவராக செயல்பட்டு அலி காமெனியுடன் நேரடியாக பேசக்கூடிய நபராக முகமது மொக்பர் இருந்து வருகிறார். இப்ராஹிம் ரெய்சி கடந்த முறை தேர்தலில் வென்று அதிபரான போது முதன்மை துணை அதிபராக பொறுப்பேற்றார் மொக்பர்.
சர்வதேச சட்டம் மற்றும் நிர்வாகத்தில் பட்டம் வென்றுள்ள மொக்பர், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து ஆழமான அறிவை கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் அடுத்த அதிபருக்கான ரேஸில் முதன்மையானவராக அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.