நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தில் 4-ம் கட்டத் தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது. அதில் 16 வயது சிறுவன் ஒருவர் பா.ஜ.க-வுக்கு 8 முறை வாக்களித்திருப்பதாக வீடியோ பரவியது. ஒவ்வொருமுறை வாக்கு செலுத்தியப் பிறகும் அவர் விரல் விட்டு எண்ணுவதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதைத் தொடர்ந்து, இந்த வீடியோ தொடர்பான தகவல்களும் வெளியாகின. அதில், இந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூகாபாத் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும், அலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான எட்டா மாவட்டத்திலுள்ள கிரி பாமரன் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக சிட்டிங் எம்.பி. முகேஷ் ராஜ்புத் களம் காண்கிறார். அந்த வீடியோவில் காணப்படும் 16 வயது சிறுவனின் பெயர் ராஜன் சிங் தாக்கூர். இவருடைய தந்தை அனில் சிங் தாக்கூர் (43). கிராமப் பஞ்சாயத் தலைவராகவும், பா.ஜ.க உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்த விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்த சிறுவனை நேற்று காவல்துறை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா,“தேர்தல் குளறுபடிகள் நடந்த வாக்குசாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுதியில் தேர்தல் பணியில் இருந்த அனைத்து ஊழியர்கள் மீதும் இடை நீக்கம், மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அந்த சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 171-எஃப் (தேர்தலில் தேவையற்ற செல்வாக்கு மற்றும் ஆள்மாறாட்டம்), 419(ஏமாற்றுதல்), பிரதிநிதித்துவத்தின் பிரிவுகள் 128, 132 மற்றும் 136 ஆகியவற்றின் கீழ் எட்டா மாவட்டத்தில் உள்ள நாயகன் காவல் நிலையத்தில் இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முறைகேடான வாக்குப்பதிவு நடந்த தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நவல் கிஷோர் ஷக்யா, வெளியிட்டிருக்கும் வீடியோவில்,“கிராம் கிரியா பாமரனில் உள்ள வாக்குச் சாவடி எண் 343-ல் முறைகேடான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. அப்பகுதியில் செல்வாக்கு செலுத்தும் கிராமத் தலைவரின் 16 வயது மகன் போலி வாக்குகளை பதிவு செய்திருக்கிறார். வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தவர்களின் வாக்குச் சீட்டை பறித்துச் சென்று அவர்கள் சார்பாக வாக்களித்திருக்கிறார். பணியில் இருந்த காவல்துறை அதிகாரி, தினேஷ் தாக்கூர், இந்த முறைகேடு வாக்குபதிவுக்கு உதவியிருக்கிறார்.
அதேபோல சாக்யா வாக்கு சாவடியில் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்த ஷக்யா என்ற எனது சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே இரண்டு வாக்குசாவடிகளிலும் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஏதாவது தவறு நடந்ததாக தேர்தல் ஆணையம் உணர்ந்தால், அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இல்லையெனில்… பா.ஜ.க-வின் வழிகாட்டல்களில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அலிகஞ்ச் தொகுதி விவகாரம் கேமராவில் சிக்கியது அவ்வளவுதான்…
ஆனால் இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்னும் பொது களத்தில் வெளிவரவில்லை. உண்மையில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி ஒரு கொள்ளை கமிட்டி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,“தோல்வியை உணர்ந்து, பா.ஜ.க அரசு இ.வி.எம் மூலம் ஜனநாயகத்தை கொள்ளையடிக்க விரும்புகிறது. அதிகார அழுத்தத்தின் கீழ் அரசு அதிகாரிகள் தங்கள் அரசியலமைப்புப் பொறுப்பை மறந்துவிடக் கூடாது. இல்லையெனில், இந்திய கூட்டணி அரசு அமைந்த பிறகு, அரசியலமைப்பின் பிரமாணத்தை அவமதிக்கும் முன் எவரும் 10 முறை யோசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இனியாவது தேர்தல் ஆணையம் விழித்துகொள்ளட்டும்.” எனத் எச்சரித்திருக்கிறார்.
இதனிடையே, அந்த வீடியோ தொடர்பாக, சிறுவனின் தந்தை அனில் சிங் தாக்கூர் பேசுகையில், “எனது மகனுக்கு 16 வயது. ராஜன் சிங் தாக்கூர் இயந்திரத்தை சோதிக்கும் போது வாக்களித்த வீடியோ அது. ஆனால், அது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது” என்றும், மற்றொரு பேட்டியில், `கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவும் விதமாக வாக்களித்தார்” என்றுக் குறிப்பிடுகிறார்.
2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதியில் 2.2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது.
இதே போன்ற முறைகேடான வாக்குபதிவு, குஜராத் மாநிலம் தாஹோத் தொகுதியின் பிரதம்புரா பகுதியில் நடைபெற்றது. இரண்டு பா.ஜ.க உறுப்பினர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலானது. அதைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறை அந்த இருவரையும் கைது செய்தது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88