சென்னை: கோடை வெயிலில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு 2 லிட்டர் அளவுள்ள குளிர்ந்த குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், கோடைவெயிலில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு 2 லிட்டர் அளவிலான குடிநீர் பாட்டில்கள் வழங்க தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள் ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெப்ப அலையை கருத்தில் கொண்டு, தகுதியுள்ள ஊழியர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்குவது தொடர்பான வழிமுறைகளை மீண்டும் வலியுறுத்த சிவில் இன்ஜினியரிங் இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, தகுதியான ஊழியர்களுக்கு 2 லிட்டர்அளவுள்ள குடிநீர் பாட்டிலைவழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளது. இந்த குடிநீர் 5-6 மணி நேரம் வரை குளிர்ச்சியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு (கேங்மேன், டிராக்மேன், கீமேன், மேட்ஸ், ரோந்து பணியாளர் ஆகியோருக்கு) குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, ரயில்வே மின்பாதை, சிக்னல் பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாற்றுபவர்களுக்கும் குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்று ரயில்வே தொழிங்சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற மூத்த ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறும்போது,வெயிலில் பணியாற்றும் ரயில் தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதுபோல, ரயில்வேயில் எல்லா பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். மின்பாதையை பராமரிப்பாளர்கள், சிக்னல் பராமரிப்பாளர்கள் ஆகியோரும் வெயிலில்தான் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கும் குடிநீர் பாட்டில்கள் வழங்க வேண்டும் என்றார்.