சவுதி அரேபியாவா இது… பேஷன் ஷோ, அதுவும் பிகினி உடையில்

ரியாத்,

சவுதி அரேபியா நாடு பழமைவாத கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டது. சமூகம், கலாசாரம், பொருளாதாரம் என எல்லாவற்றிலும் பாரம்பரிய வழிமுறைகளை அந்நாட்டு மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்நாட்டில் சட்டங்களும் அதற்கேற்றாற்போல் கடுமையானவை.

10 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உடல் முழுவதும் துணியால் மறைத்தபடி ஆடைகளை அணிய வேண்டும். ஆண்களுக்கு என்றும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை மீறுபவர்களுக்கு அபராதம், தண்டனை ஆகியவை விதிக்கப்படும். இந்த நடைமுறை எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் வரை கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது.

ஆனால், சமீப காலங்களாக நிலைமை முற்றிலும் மாறி விட்டது. பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை நீக்கப்பட்டு விட்டது. 2017-ம் ஆண்டு இளவரசர் முகமது பின் சல்மான் அரியணை ஏறியதும் அந்நாட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இதன்படி, 2018-ம் ஆண்டில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான பெண்கள் கார் ஓட்ட தொடங்கி விட்டனர். வணிக வளாகங்களில் உள்ள ஆண்களை இறைவழிபாடு செய்ய போகும்படி, குச்சியுடன் போலீசார் துரத்தும் காட்சிகள் மாறி விட்டன.

திரையரங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன. இசை கச்சேரிகளில் ஆண், பெண் என இரு பாலினத்தவர்களும் ஒன்றாக பங்கேற்கும் சூழலும் உள்ளது. இதுபோன்று பல்வேறு சமூக சீர்திருத்தங்கள் சார்ந்த விசயங்கள் சவுதி அரேபியாவில் நடந்து வருகின்றன.

இவை எல்லாவற்றையும் விட சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்த செயின்ட் ரெகிஸ் செங்கடல் ரிசார்ட்டில் இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்தனர்.

அதுவும் சிவப்பு, பச்சை என பல்வேறு வண்ணங்களிலான ஒற்றை பிகினி உடையணிந்தபடி காட்சியளித்தனர். சிரியா, பிரான்ஸ் உள்பட பல்வேறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் பங்கு பெற்றனர். பார்வையாளர்களும் வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை திறந்தவெளி பகுதியில் அமர்ந்தபடி கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் சிலர் கைகளில் பை உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு கடைக்கு செல்வது போலவும், சிலர் வெயிலுக்கு இதம் தரும் வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டும் நடந்து சென்றனர்.

கலாசாரம் சார்ந்த இதுபோன்ற நிகழ்ச்சிகளால் அரசுக்கு பெருமளவில் வருவாயும் வந்து சேர்கிறது. இதனை கவனத்தில் கொண்டு 2030-ம் ஆண்டில் சமூக பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.