புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய பாகுபாடு இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக கடந்த மாதம் தகவல் பரவியது. அதன் பிறகு குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வு செய்ததில் சாணம் கலக்கப்படவில்லை என தெரிய வந்தது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர்த் தொட்டியானது அதன்பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டது குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்களுக்கு குளங்கள் மற்றும் சமுதாய கூடங்களை பயன்படுத்த விடாமல் தடுப்பது, இரட்டை குவளை பின்பற்றி வருகிறது’ என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் தலைமையில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில், டிஎஸ்பி சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் எந்தெந்த இடங்களில் ஆய்வு செய்து விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.