புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் சொத்தாக உள்ளது.
இந்நிலையில் இந்த மசூதி முன்பு கோயிலாக இருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ரா மற்றும் மதுராவில் இதுபோன்ற வழக்குகளால் பிரபலமான வழக்கறிஞர் அஜய் பிரதாப்சிங், இந்த வழக்கையும் தொடுத்துள்ளார். ஜோன்பூரின் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இதற்கான மனு நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது. இதனை நீதிபதி கிரண் மிஸ்ரா விசாரணைக்கு ஏற்றுள்ளார். உ.பி. மத்திய சன்னி வக்ஃபு வாரியம் மற்றும் அத்தலா மசூதி நிர்வாக கமிட்டிக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அஜய் பிரதாப் தனது மனுவுக்கான ஆதாரங்களாக, இந்திய தொல்லியல் துறை இயக்குநரின் ஆய்வுகளையும் சில வரலாற்று நூல்களையும் இணைத்துள்ளார்.
இவற்றின்படி, கன்னோஜ் பகுதி ஆட்சியின் கீழ் இருந்த ஜோன்பூரை ஆட்சி செய்த மன்னர் ஜெய்சந்திரா ராத்தோர், அத்தலா மாதா எனும் பெயரில் கோயிலாகக் கட்டியுள்ளார். அவரது ஆட்சியை பிடித்த பெரோஸ் ஷா 1377-ல் அக்கோயிலை இடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து தடுக்க முயன்றுள்ளனர்.
பிறகு அனைவரும் அந்தப் பகுதியை காலி செய்துவிட்டு அருகிலுள்ள கிராமங்களில் குடியேறினர். தொடர்ந்து கட்டப்பட்ட ஷாஹி அத்தலா மசூதியை பெரோஸ் ஷாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இப்ராஹிம் ஷா கி.பி. 1408-ல் கட்டி முடித்துள்ளார். இதனுள் மதரஸாவும் செயல்பட்டு வந்துள்ளது.
மேலும் இந்த அத்தலா மசூதி கட்டிடங்களில் இன்றும் இடம்பெற்றுள்ள செம்பருத்தி, திரிசூலம், மணி உள்ளிட்ட ஓவியங்கள், இந்துக்களுடன் தொடர்புடையதாக உள்ளன. மசூதியின் உள்ளே கட்டிடங்களின் தூண்களும் இந்து கோயில் கட்டிடக்கலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை கொல்கத்தா ஓவியக் கலைக் கல்லூரி முதல்வர் ஈ.பி.ஹவேலி ஆய்வுசெய்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உ.பி. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகு வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாஹி ஈத்கா மசூதி ஆகியவை தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறுகிறது. இந்த சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்கள் பட்டியலில் ஜோன்பூரின் அத்தலா மசூதியும் இணையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கு மே 22-ல்நீதிமன்ற விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.