திருச்சி: குடும்பத் தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை! – மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கிறது கரிக்கான்குளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது: 57). இவரது மனைவி லட்சுமி (வயது: 47). இந்த தம்பதியருக்கு சதீஷ்குமார் (வயது: 31), ரஞ்சித்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதில், இவர்களது மூத்த மகனான சதீஷ்குமார் திருமணமாகி வடுகப்பட்டியில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக சதீஷ்குமாருக்கும், அவரது பெற்றோர் மற்றும் தம்பியுடன் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் சதீஷ்குமாருக்கும், அவரது தந்தையான முருகேசனுக்கும் இடையில் தகராறு எழுந்துள்ளது. அப்போது, மது போதையில் இருந்த சதீஷ்குமார் அரிவாளால் தந்தையை வெட்ட முயன்றார். உடனே சுதாரித்துக் கொண்ட முருகேசன், மகன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி சதீஷ்குமாரின் கையை வெட்டியதில், அவருக்கு மூன்று இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

வெட்டுக்காயம்

இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மணப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தினர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் குணசேகரன், காயம்பட்ட சதீஷ்குமார், அவரை வெட்டிய சதீஷ்குமாரின் தந்தை முருகேசன் ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் தந்தையே மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.