`பா.ஜ.க-வா… உள்ள வராதே!' விரட்டியடிக்கும் விவசாயிகள்… வேதனையில் வேட்பாளர்கள்!

பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று விவசாயிகள் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

கடந்த சில மாதங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், மத்திய அரசு எல்லையில் ராட்சத தடுப்புகளை அமைத்து விவசாயிகள் டெல்லிக்குள் வரவிடாமல் தடுத்துவிட்டது. அந்த கோபம் இன்னும் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளிடமிருந்து கொண்டிருக்கிறது. இதனால் ‘டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடாத பா.ஜ.கவிற்கு இங்கு வர தடை விதிக்கப்படுகிறது’ என்று அறிவிப்பு பலகை எழுதி கிராமங்களில் தொங்க விட்டுள்ளனர்.

ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இது போன்ற அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. இதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் வேறு வழியில்லாமல் போலீஸார் உதவியுடன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், ஜாட் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் பா.ஜ.க வேட்பாளர்களை உள்ளே விடும் விவகாரத்தில் கிராம மக்கள் சமரசம் செய்து கொள்ள மறுக்கின்றனர். செளதாலா குடும்பத்தினரைக்கூட உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். கடந்த வாரம் ஹிசார் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றுக்கு சவுதாலாவின் மகன் அஜய் சிங் தனது மனைவி நைனா சவுதாலா மற்றும் மகனுடன் சென்ற போது அவர்களை உள்ளே விட மறுத்துவிட்டனர்.

பூபிந்தர் சிங் ஹோடா

முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹோடா விவசாயிகளை தூண்டிவிட்டு பா.ஜ.க வேட்பாளர்களை கிராமத்திற்குள் அனுமதிக்க மறுப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது.

இது குறித்து பூபிந்தர் சிங் ஹோடா கூறுகையில், ”மக்கள் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருக்கின்றனர். விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க பா.ஜ.க தவறிவிட்டது. ஹரியானாவை பா.ஜ.க பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. ஹரியானாவில் தான் நாட்டிலேயே அதிக பட்சமாக வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது” என்றார்.

ஹரியானா மட்டுமல்லாது பஞ்சாப்பில் இதைவிட நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.