லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்மற்றும் அவரது மனைவி அக் ஷதாமூர்த்தியின் சொத்து மதிப்பு ரூ.6,800 கோடியாக அதிகரித்துள்ளது. இது இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பை விட அதிகம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டுக்கான இந்தியவம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர் பட்டியலில் 44 வயதான ரிஷி சுனக் மற்றும் அக் ஷதா மூர்த்தி தம்பதி கடந்த ஆண்டு 275-வது இடத்திலிருந்து 245-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அவர்களது சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்டாக (ரூ.6,800 கோடி) உள்ளது. இது மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பான 610 மில்லியன் பவுண்டை (ரூ.6,435 கோடி/258-வது இடம்) விட அதிகம்.
அக் ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவர் ரிஷி சுனக்கின் வருமானத்தை விட மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதிநிலை அறிக்கையில் 2.2 மில்லியன் பவுண்டை மட்டுமே ரிஷி சுனக் வருமானமாக ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் பங்கை வைத்திருப்பதுதான் அக்ஷதா மூர்த்தியிடம் உள்ள அக் ஷய பாத்திரமாக, மதிப்பு மிக்க சொத்தாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதன் மூலம் அவர் 13 மில்லியன் பவுண்டை (ரூ.137 கோடி) டிவிடெண்டாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி இந்துஜா குடும்பம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 37.166 பில்லியன் பவுண்டை எட்டியது.
இந்தியாவில் பிறந்த சகோதரர்களான டேவிட் மற்றும் சைமன் ரூபன் கடந்த ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்து 3-வது இடத் துக்கு முன்னேறியுள்ளனர். அவர் களின் சொத்துமதிப்பு 24.977 பில்லி யன் பவுண்ட்.
ஆர்சிலர் மிட்டலின் லட்சுமி என்.மிட்டல் 14.921 பில்லியன்பவுண்டுடன் 8-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ல் அவர் இரண்டு இடங்கள் பின்னடைந்துள்ளார்.
வேதாந்தா ரிசோர்ஸின் தலைவர் அனில் அகர்வால் 7 பில்லியன் பவுண்டுடன் 23-வது இடத்திலும், ஜவுளி தொழிலதிபர் பிரகாஷ் லோஹியா 6.23 பில்லியன் பவுண்டுடன் 30-வது இடத்திலும் உள்ளனர்என சண்டே டைம்ஸ் தெரிவித் துள்ளது.