“புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்தாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு

தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், “புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (20) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் ஆலோசனையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மீதிரிகல ஆரண்ய சேனாசனவாசி வணக்கத்திற்குரிய ஹோமாகம தம்மகுசல தேரர் மாணவர்களுக்கு “தியானம்” மேற்கொள்வது பற்றிய நடைமுறை பயிற்சிகளை வழங்கினார்.

இங்கு சிறப்புரையாற்றிய கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், நாட்டின் எதிர்காலம் சிறுவர் தலைமுறையைச் சார்ந்தது எனவும், நாட்டின் சிறுவர்களின் அறிவு, கல்வி, திறமை, திறன் என்பவற்றிலே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒழுக்கமும் திறமையும் கொண்ட சிறுவர் தலைமுறையை உருவாக்குவதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர்,

2002 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் Religious diversity in United States என்ற பெயரில் மதப் பல்வகைமை தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஏராளமான அறிஞர்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஒரு அறிஞர் இவ்வாறு தெரிவித்தார்.

“சில தசாப்தங்களில், உலகின் எதிர்காலம் வேறு பரிமாணத்திற்கு நகரக்கூடும். உலக மக்கள் தொகை அதிகரிப்பு இயற்கையானது. உலகில் கிடைக்கும் வளங்கள் விகிதாசாரமாக அதிகரிக்காது. அவை படிப்படியாக குறைந்து வருகின்றன. எல்லையற்ற மக்கள் மத்தியில் அந்த வரையறுக்கப்பட்ட வளங்களை விநியோகிப்பதில் பெரும் ஆர்வம் உள்ளது. அதற்கான தலைமைகள் கடினமாக உழைக்கிறார்கள். இதன் விளைவாக போட்டி அதிகரிக்கிறது. போட்டி அதிகரிக்கும் போது, ​​மக்களின் நடவடிக்கைகள் வேறு பாதையில் செல்கின்றன. எழுச்சி பெறும் இந்த முயற்சியால் நாம் பெறுவதை விட அதிகமாக இழக்கிறோம். முதலில் இழப்பது மனிதநேயம். மனிதநேயம் இல்லாத சமூகம் பயனற்றது. இந்தப் போட்டியில் மக்கள் இயந்திரங்களாக மாறுவது தவிர்க்க முடியாதது. சுதந்திரத்தை இழப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த நிலையை அடையும் போது, ​​மக்கள் மகிழ்ச்சியாக இருக்க ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறார்கள். அதுதான் மனதை ஒருநிலைப்படுத்துவது.

அவர் குறிப்பிட்டிருந்த மனதை ஒருநிலைப்படுத்தும் நிலையானது புத்த பெருமானின் பிரசங்கத்தின் ஒரு பகுதியாகும். மனதை ஒருநிலைப்படுத்துவதால், சிந்தனையை வலுப்படுத்துவதால் வாரம் முழுவதும் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும். மகிழ்ச்சி அடையலாம். ஆனால் அதற்கு அப்பால் சென்று பௌத்தர்கள் என்ற வகையில் ஆன்மீக விடுதலையான நிர்வாணத்தை அடைவதற்கு இதனை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கிறது. இந்தப் பயிற்சியை வாழ்க்கையில் தொடர்வதால் கிடைக்கும் பலன்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய அபயாராம விகாராதிபதி , கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன, ஜனாதிபதி அலுவலக மேலதிக செயலாளர் கமல் புஸ்பகுமார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.