மோடி முதல் புதின் வரை: ஈரான் அதிபர் ரெய்சி மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விளாடிதிமிர் புதின்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு அனுப்பி உள்ள இரங்கல் செய்தியில், “ஈரான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சோகம் தொடர்பாக எனது ஆழ்ந்த இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்ராஹிம் ரெய்சி ஒரு சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். அவர் தனது முழு வாழ்க்கையையும் தாய்நாட்டுக்கு சேவை செய்வதில் அர்ப்பணித்தார். ரஷ்யாவின் உண்மையான நண்பராக இருந்தவர் அவர். நமது நாடுகளுக்கு இடையே நல் உறவை மேம்படுத்துவதற்கு விலைமதிப்பற்ற தனிப்பட்ட பங்களிப்பை வழங்கியவர்” என தெரிவித்துள்ளார்.

ஜி ஜின்பிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் துணை அதிபருக்கு தனது இரங்கல் செய்தியை அனுப்பி உள்ளார். அதில், “இப்ராஹிம் ரெய்சியின் சோகமான மரணம் ஈரானிய மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. மேலும், சீன மக்கள் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டனர். ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ரெய்சி முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளார். சீனா-ஈரான் இடையே விரிவான கூட்டாண்மையை ஒருங்கிணைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டிருப்பதாக, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.

தயிப் எர்டோகன்: துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த அன்புச் சகோதரர், ஈரான் இஸ்லாமியக் குடியரசுத் தலைவர் இப்ராஹிம் ரெய்சிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரானிய மக்கள் மற்றும் நமது பிராந்தியத்தின் அமைதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டவர் என்ற முறையில், ரெய்சியை மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பஷார் அல் அசாத்: சிரிய நாட்டு அதிபர் பஷார் அல் அசாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிரியாவின் நெருங்கிய நட்பு நாடு ஈரான். எங்கள் நாடு போரை சந்தித்த காலங்களில், ஈரான் எங்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளது. இதில், அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் பங்களிப்பு மிகப் பெரியது. மறைந்த அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்கள் உறுதியான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். சிரியாவுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவை உறுதிப்படுத்த இப்ராஹிம் ரெய்சியுடன் நாங்கள் பணியாற்றி உள்ளோம். நமது உறவு எப்போதும் செழித்து வளரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.