சென்னை: அயலகத் தமிழர் நலத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டு, அதன்மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி, வெளிநாட்டு அயலகத் தமிழர் மற்றும் வெளிமாநில அயலகத் தமிழர் ஆகிய பிரிவுகளின் கீழ் வாரியத்தில் தங்களை உறுப்பினராக இணைத்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இதையொட்டி உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் வகையில் மே 15 முதல் ஆக.15 வரையிலான 3 மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறமுடியும்.
அந்த வகையில் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காப்பீட்டு தொகை சந்தாக்களில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்து பயனடையலாம். இதுதவிர தீவிர மற்றும் தொடர் சிகிச்சைக்கு தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு தொகைக்கு ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள சந்தாக்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
அயல்நாடு தமிழர் இறக்கும் நிலையில், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதேபோல, அயல்நாடு தமிழர் இறக்கும் நிலையில், திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன் மற்றும் மகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை https://nrtamils.tn.gov.in என்ற தளத்திலும், இந்தியாவுக்குள் 18003093793 என்ற தொலைபேசி எண்ணிலும், அயல்நாடுகளில் இருந்து 8069009901 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு இலவசமாக தெரிந்து கொள்ளலாம்.