ஹெலிகாப்டர் விபத்து | அதிபர் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஈரான் ஊடக தகவல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு டிவி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டன. இந்தச் சூழலில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற அதிபர் ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.

விபத்து நிகழ்ந்த இடம் வனப்பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்த இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடம் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியை ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் அணை திறப்பு விழாவில் பங்கேற்க அதிபர் ரெய்சி சென்றிருந்தார். அவருடன் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்தனர்.

ட்ரோன் மட்டுமல்லாது சாட்டிலைட் தொழில்நுட்பமும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை அடையாளம் காண உதவியது. சம்பவ இடத்தில் ஈரான் ராணுவம், மீட்புப் படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளனர். ஹெலிகாப்டர் மலை மீது மோதி முழுவதுமாக உருக்குலைந்துள்ளது. அவரது மறைவு அந்த நாட்டு மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் ஈரான் உடன் இந்த நேரத்தில் நிற்பதாக தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.